Monday 31 May 2021

ஒரு சரித்திர நிகழ்வு!

 பல நூறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியும் செவ்வாயும் தற்போதைய நிலையை விட ஒன்று போலிருந்தன. இரண்டு கிரகங்களிலும் நீர் இருந்தது. நிலப்பரப்பும் இருந்தது. சூரியனின் சக்திமிக்க கதிர்வீச்சிலிருந்து மேற்பரப்பைப் பாதுகாக்க காந்தப்புலங்களும் இருந்தன. ஆனால் பூமியில் மட்டும் உயிரினங்கள் உண்டாகிப் பல்கிப்பெருகின. செவ்வாயில் அது ஏன் நடக்கவில்லை? அல்லது ஒருவேளை நடந்திருக்குமோ??


இந்தக் கேள்விக்கு விடை தேடி மனித இனம் வளர்ச்சியுற்ற பின்னர் செவ்வாயைச் சுற்றி வந்து ஆராயவும், அங்கு இறங்கி சோதனைகள் செய்யவும் ராக்கெட்டுகளை அனுப்பியது. மனித இனத்தின் அடுத்தப் பாய்ச்சலாக செவ்வாயில் குடியேற்றம் செய்யவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் நம் பூமியின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் ராக்கெட்டுகளை சோதனை செய்துகொண்டிருக்கிறார். இந்த மாதத்திற்குள் அவர்களது அடுத்த சோதனை ராக்கெட்டான SN10 பயணிக்க இருக்கின்றது.

செவ்வாயின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைக் கோளை நிலைநிறுத்துவதும் அங்கு தரையிறங்குவதும் கடினமான ஒன்று. பல நாடுகளின் இம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இது வரை ஐந்து நாடுகள் மட்டுமே இதில் வெற்றி கண்டுள்ளன. (அதில் நம் இந்தியாவும் ஒன்று 2013 நவம்பரில் ஏவப்பட்டு செப்டம்பர் 2014-ல் செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கல்யான் அதன் முதன்மைப் பணியை முடித்து விட்டாலும் இன்றும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது). செவ்வாயில் தரையிறங்குதலுக்கு பல்வேறு சிக்கல்கள் காரணிகளாக இருப்பதால் தான் அது மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. அதில் முதன்மையான காரணமானது தொலைத் தொடர்பு.

”எஞ்சின் இயக்கத்தை நிறுத்தவும்” என்று ரேடியோ சிக்னல் மூலம் நாம் அனுப்பினால் 11 நிமிடங்கள் கழித்தே அது நம் விண்கலத்தைச் சென்று சேரும். ”மெயின் எஞ்சினையா?” என்று விண்கலம் பதில் கேள்வி வினவினால் அது வந்து சேர அடுத்த 11 நிமிடங்களாகும். ஆக மொத்தம் 22 நிமிடங்கள். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டிருக்கும்! எனவே அனுப்பப்படும் விண்கலம் தன்னிச்சையாகவே எல்லாம் செய்தாக வேண்டும். இதனாலேயே செவ்வாயில் தரையிறங்கும் முயற்சிகளில் இதுவரை 40% மட்டுமே வெற்றி கிட்டியிருக்கிறது.

தற்போது Perseverance [விடாமுயற்சி – காரணப்பெயர்(!) ] என்ற பெயரிடப்பட்ட நாசாவின் ரோவர் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி காண களமிறங்கியிருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட அது தொடர்ந்து ஆறரை மாதங்கள் பயணித்து எதிர்வரும் பிப்ரவரி 18-ம் தேதி செவ்வாயில் தரையிறங்க இருக்கிறது. அந்த நிகழ்வை நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கின்றார்கள். அதில் அப்படியென்ன முக்கியத்துவம்?





கடந்த 2019-ம் வருடம் செவ்வாய்க்கு உங்கள் பெயரை அனுப்புங்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது நாசா. இதன் மூலம் 11 மில்லியன் பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தார்கள். (அதில் நானும் ஒருவன் 😉 ) அந்தப் பெயர்களை எல்லாம் மூன்று சிலிக்கான் சிப்புகளில் ஏற்றி ரோவரில் பதித்து வைத்திருக்கிறார்கள். இது தவிர இந்த பேண்டமிக் யுகத்தில் சிறப்பாக களப்பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதத்தில் அவர்களுக்கும் இடமளித்திருக்கிறார்கள்.

செவ்வாயில் தரையிறங்கும் நிகழ்வானது மூன்று பகுதிகளாக நிகழ்கிறது. செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைதல், கீழே இறங்குதல் பின்னர் தரையைத் தொடுதல். சுருக்கமாக (EDL) என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு மணிக்கு 20 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நுழைந்து அடுத்த ஏழு நிமிடங்களில் தரையிறங்கி விடுதலோடு முடிந்து விடும். இந்த 7 நிமிட திக் திக் நிகழ்வைத் தான் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி 18-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் துவங்கும்.

Perseverance தரையிறங்கத் திட்டமிட்டிருக்கும் இடம் Jezero crater எனும் 45 கிலோ மீட்டர் அகலமுள்ள பள்ளம். இது பாறைகள், மணல் குன்றுகள், செங்குத்தான மலைகள் நிறைந்த தரையிறங்க இன்னும் கடினமான பகுதி. ஏற்கனவே செவ்வாயில் தரையிறங்குதல் கடினம். இந்த ஜெசிரோ பள்ளம் அதை இன்னும் கடினமாக்குமென்றால் அப்படிப்பட்ட இடத்தை விஞ்ஞானிகள் ஏன் தேர்ந்தெடுத்தனர்? காரணம் இருக்கிறது.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆறு பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அதன் கழிமுகப்பகுதியாக இருக்கும் இந்தப்பள்ளத்தில் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம். Jezero என்றால் ஏரி என்று பொருள். இங்கு கார்பன் கனிமங்கள் இருப்பதாக முந்தைய ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றது.

இதற்கு முந்தைய ரோவர்கள் எளிதில் இறங்கக்கூடிய சமதளப்பகுதிகளில் தரையிறங்கி பின்னர் ஆராய்ச்சி மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை நோக்கிப் பயணித்தன. இதற்கு நிறைய நாட்கள் வீணானது. இம்முறை கடினமான இடமாக இருந்தாலும் தரையிறங்க உதவும் வகையில் இரண்டு புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த இருக்கிறார்கள்.

அவை என்ன தொழில்நுட்பங்கள்?


தரையிறங்கும் சமயத்திலேயே இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் பரிசோதிக்கப்பட இருக்கின்றன. இறங்கும் நிலப்பரப்புக்கேற்றவாரு லேண்டரை வழிநடத்தி, தேவைப்பட்டால் கடைசி வினாடியில் இறங்குமிடத்தை மாற்றி இறக்கக்கூடிய வல்லமை படைத்த தொழில்நுட்பமும் துல்லியமான நேரத்தில் லேண்டரின் பாராசூட்டை விரிக்க உதவும் Range Trigger எனும் தொழில்நுட்பமும்.

செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு செவ்வாய் வரை பயணிக்க உதவிய எரிபொருள் தொட்டிகள், சூரியத்தகடுகள் முதலியவற்றை கழற்றி விடப்படுகின்றன. இதன்பின் அதன் த்ரஸ்டர்கள் மூலம் விண்கலத்தின் வெப்பக்கவசம் கீழ்நோக்கியிருக்குமாறு திருப்பி விடப்படும். ஏனெனில் விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழையும்போது 2400 டிகிரி வெப்பம் உருவாகும். வெப்பக்கவசம் அதைத் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர ரோவரானது ஏரோஷெல் எனும் மற்றுமொரு சிறப்புக் கவசத்தில் பாதுகாக்கப்பட்டிருப்பதால் அங்கு ஒரு அறை வெப்பமே நிலவும்.

விமானங்களில் பயணிக்கும்போது காற்றுப் பைகள் பற்றி உணர்ந்திருப்போம். செவ்வாயின் வளிமண்டலத்திலும் அத்தகையக் காற்றுப் பைகள் உண்டு. அவை விண்கலத்தைத் திசை திருப்ப நேரிட்டாலும் த்ரஸ்டர்கள் அதன் இலக்கை நோக்கிய பாதையில் தொடர்ந்து செல்ல உதவி செய்யும். வெப்பக்கவசம் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1600 கிலோ மீட்டராக குறைக்கிறது. இது பாராசூட் விரிக்கப்பட வேண்டிய நேரம்.

சுமாராக 11 கிலோமீட்டர் உயரத்தையும் குறிப்பிட்ட வேகத்தையும் அடையும் போது பாராசூட் விரிக்கப்படும். Perseverance தனது சூப்பர்சோனிக் பாராசூட்டை விரிக்க வேண்டிய நேரத்தை Range Trigger எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் செய்ய இருக்கிறது. இது இறங்க வேண்டிய இலக்கிற்கும் இருக்கும் உயரத்திற்கும் தொலைவைக் கணக்கிட்டு சரியான நேரத்தில் சூப்பர்சோனிக் பாராசூட் விரிவதை உறுதி செய்யும். இந்த Range Trigger போல மேலும் சில புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்க இருக்கிறார்கள். Perseverance சேகரித்து வைக்கும் பாறை மாதிரிகளை பூமிக்குத் திரும்ப கொண்டு வர உதவும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும்.

பாராசூட் விரிக்கப்பட்ட 20 வினாடிகளுக்கு பிறகு வெப்பக்கவசமும் பிரித்து விடுவிக்கப்படுகிறது. இப்போது உள்ளிருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கேமரா கீழே தெரியும் தரைப்பகுதியை படமெடுத்து ரேடாரிடம் அளிக்கும். நிலப்பரப்புக்கேற்ப வழிநடத்தும் அமைப்பு தற்போது பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதுவும் ஒரு புதிய தொழில்நுட்பமாகும். அது தன்னிடமுள்ள (முந்தைய லேண்டர்கள் மூலம் பெறப்பட்ட) நிலப்பரப்புகளின் மாதிரிகளை வைத்து இறங்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கிறது. தனக்குக் கீழே இருக்கும் நிலப்பரப்பு பாறைகளோ, குன்றுகளோ நிறைந்தது எனில் அது அருகிலிருக்கும் நிலப்பரப்புகளை ஆராய்ந்து தேவைப்பட்டால் லேண்டரை கிட்டத்தட்ட 600 மீட்டர்கள் அளவுக்குத் தள்ளி இறங்கச் செய்யும் செயல்முறைகளைக் கொண்டிருக்கும். இது அத்தனையும் பத்தே விநாடிகளில் நடந்து முடிய வேண்டும். நாசா விஞ்ஞானிகள் நகங்கள் பறிபோகக் காத்திருக்கின்றன.

திக் திக் நிமிடங்கள் இத்துடன் முடியவில்லை. இப்போது ஸ்கைக்ரேனின் வேலை தொடங்குகிறது. அதென்ன ஸ்கை கிரேன்?



லேண்டர் பாராசூட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அதே சமயம் கேமராக்கள் தொடர்ந்து இயங்கி நிலப்பரப்பை புகைப்படங்கள் எடுத்து சரிபார்த்து துல்லியமாக இறங்க வேண்டிய இடத்தைத் தீர்மானிக்கின்றன. விடுவிக்கப்பட்ட பாராசூட் தன்மேல் விழுவதைத் தவிர்க்க த்ரஸ்டர்கள் மூலம் தன்னைச் சற்று நகர்த்திக் கொள்ளும். என்ன ஒரு புத்திசாலித்தனம்(!) கிட்டத்தட்ட 2100 மீட்டர்கள் உயரத்திலிருக்கும்போது ஸ்கைகிரேனுடன் இணைக்கப்பட்டுள்ள எட்டு ராக்கெட்டுகள் ஒரு ஜெட்பேக்கைப் போல செயல்பட்டு கீழிறங்கத் துவங்கும்.

தரையைத் தொட சரியாக 12 வினாடிகள் இருக்கும்போது ரோவரை 6 மீட்டர் நீளமுள்ள நைலான் கயிறுகளின் மூலம் கீழே இறக்குகிறது ஸ்கை கிரேன். இப்போது ரோவர் ஒரு விமானம் தரையிறங்க அதன் சக்கரத்தை வெளியாக்கித் தயாராவதைப் போல கீழிறங்கும். ரோவரின் சக்கரங்கள் தரையைத் தொட்டவுடன் ஸ்கைகிரேனின் நைலான் கயிறுகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நெருப்புப் பொறி போல வெட்டப்பட்டு விடும். இப்போது ஸ்கைகிரேன் அது தன் கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு ராக்கெட்டுகளின் உதவியோடு ரோவரிடமிருந்து சற்றே பாதுகாப்பான தூரத்தை அடைந்து தன் உயிரை விடும்(!).

Perseverance இது வரை செவ்வாயில் தரையிறங்கிய மற்ற ரோவர்களை விட அதிக தூரம் பயணிக்க இருக்கிறது. இதுவரை செவ்வாயில் ஒருநாளில் Opportunity (ஆப்பர்சூனிட்டி) ரோவர் பயணித்த தூரமான 214 மீட்டர்கள் தான் ஒரு ரோவர் பயணித்த அதிகபட்சத் தொலைவு. ஆனால் Perseverance தினமுமே 200 மீட்டர்கள் பயணிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் ஒரு நாளென்பது பூமியின் ஒரு நாளை விட 40 நிமிடங்களே அதிகம்.

Perseverance ரோவர் நாசா இது வரை அனுப்பியதில் ஐந்தாவது ரோவராகும். இது ஒரு டன் எடையுடன் பத்து அடிகள் நீளமும் 9 அடிகள் அகலமும் கொண்டது. இதில் மொத்தம் ஆறு சக்கரங்கள் இருக்கும்.

ரோவரின் மூளையாக செயல்பட இரண்டு கணினிகள் இதில் இருந்தாலும் ஒரு
நேரத்தில் ஒன்று மட்டுமே இயங்கும். இவை தவிர புகைப்படங்களை ஆராய்ந்து அதனுடனிருக்கும் வரைபடத்துடன் ஒப்பிடும் பணியை மூன்றாவதாக ஒரு கணினி செய்யும். இதில் மொத்தம் 23 கேமராக்கள் உள்ளன. தரையிறங்கும் பணிக்காக ஏழு கேமராக்களும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஏழு கேமராக்களும் பொறியியல் பணிக்காக ஒன்பது கேமராக்களும் உதவும். மேலும் ஒலியைப் பதிவு செய்வதற்காக இரண்டு மைக்ரோபோன்களும் உள்ளன.

ரோவர் தரையிறங்கியவுடன் அதனால் விளைந்த தூசுகள் அடங்கியவுடன் புகைப்படம் எடுத்து அனுப்புவது தான் அதன் முதல் வேலை. ஆனால் இந்தப்படங்கள் சுமாரான தரத்துடன் தான் இருக்கும். ஏனெனில் Hazcam எனப்படும் இரு கேமராக்களின் லென்ஸ்கள் தூசி படாவண்ணம் கவர் செய்யப்பட்டிருக்கும். அப்படியே எடுக்கப்படும் புகைப்படங்கள் தான் முதலில் கிடைக்கும். அன்றைய தினமே சிறிது நேரம் கழித்து அதிகத் தெளிவான புகைப்படங்கள் எடுத்து அனுப்பப்படும்.

எல்லாம் சரி, செவ்வாயில் தங்கி வேலை செய்யும் இந்த ரோவருக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்? ஒரு வேளை சூரிய மின்சாரம் கிடைக்காவிடில் மாற்று எரிபொருள் என்ன? இன்னுமொரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. அது என்ன?




அந்த இன்னுமொரு ஆச்சர்யம் ஹெலிகாப்டர். ஆம். பூமியைத் தவிர வேறொரு கிரகத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறக்க இருக்கிறது. அதுவும் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் ஒரு ஹெலிகாப்டர் தன்னிச்சையாக தானே மேலெழுந்து பறந்து திரிந்து புகைப்படங்கள் எடுத்து அனுப்ப இருக்கிறது.

தரையிறங்கியதிலிருந்து 30 நாட்கள் கழித்து Ingenuity எனும் ஹெலிகாப்டர் விடுவிக்கப்படும். அதுவும் ரோவர் இறங்கிய இடத்திலிருந்து நகர்ந்து நகர்ந்து சமதளமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து (ஹெலிபேடாம்!) Ingenuity எனும் இரு கேமராக்கள் கொண்ட அந்த ஹெலிகாப்டரை பறக்க அனுப்பும். 2 கிலோ எடையுள்ள இந்த ஹெலிகாப்டர் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் பறந்து ஆராய்ந்து தகவல்களை ரோவருடன் பரிமாறிக் கொள்ளும். இத்தகவகல்களை ரோவர் பூமிக்கு அனுப்பும்.

இந்த ரோவர் வேலை செய்ய மின்சாரம் தேவையாயிற்றே! சூரிய மின்சாரத்தை நம்பிக்கொண்டிருந்தால் குளிர் காலத்தில் என்னாவது? அதற்கு MMRTG எனப்படும் அணு மின்கலம் உதவுகிறது. இந்த மின்கலத்தால் உருவாகும் வெப்பம் கூட வீணடிக்கப்படாமல் திரவவடிவில் சேமிக்கப்பட்டு செவ்வாயின் இரவு நேர கடும் குளிரிலிருந்து மின்னணு சாதனங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். இந்த ரோவரின் முதன்மை நோக்கமானது முன்பு செவ்வாயில் நுண்ணுயிர்கள் இருந்தனவா என்பதை ஆராய்வதே.

இதனாலேயே பனிக்கட்டியாகவே திரவ வடிவிலோ நீர் இருக்கும் பகுதிகளை விட்டு Jezero பள்ளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Perseverance ரோவரில் இன்னுமொரு அதிசயமான புதிய தொழில்நுட்பம் மோக்சி (MOXIE). செவ்வாயின் காற்றில் காணப்படும் கார்பன் டை ஆக்சைடிலிருந்து ஆக்சிஜனை உருவாக்க முடியுமா என்று இதிலிருக்கும் MOXIE எனும் கருவி ஆராயும். இதன்மூலம் எதிர்காலத்தில் செவ்வாயிலிருந்து ராக்கெட் பூமிக்குத் திரும்ப திரவ ஆக்சிஜன் அங்கேயே நம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். தவிர மனிதர்கள் சுவாசிக்க ஆக்சிஜனையும் உற்பத்தி செய்ய முடியும்.

தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களிலிருந்தே தேவையானவற்றை உற்பத்தி செய்து கொண்டால் செலவும் மிச்சமாகும் தானே?

செவ்வாயின் காலநிலை, புவியியல், எதிர்காலத்தில் மனிதர்கள் மூலம் ஆய்வு செய்தல் போன்றவை தான் இந்த ரோவரின் பணிகள். இதன் இயந்திரக்கையில் இருக்கும் PIXL எனும் எக்ஸ்ரே கருவி ஒரு மணற்துகளை பத்தே வினாடிகளில் ஆராயும் திறமை பெற்றது. மற்றொரு கருவியான SHERLOC செவ்வாயில் இருக்கும் கரிம மூலக்கூறுகளைப் பற்றி ஆராய்ந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும். ஷெர்லாக் பெயர்க்காரணம் தெரிகிறதா?

SUPERCAM எனும் கேமரா லேசர் மூலம் 7 மீட்டர் தொலைவிலிருந்தே ஆராய முடியும். மேலும் தனது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எதை ஆராயலாம் என்றும் அதுவே முடிவு செய்யும். செவ்வாயின் பாறைகளில் சிறு துளையிட்டு ஒரு சாக்பீஸ் துண்டு அளவுக்கு வெட்டியெடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளும். அந்தக் கற்கள் பின்னர் நாசாவும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் இணைந்து செயல்படுத்த இருக்கும் மாதிரிக் கற்களை திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்தின் படி கொண்டு வரப்படும்.

இந்தத் திட்டத்திற்காக நாசா செலவிட்டிருக்கும் தொகை 2.5 பில்லியன் டாலர்கள். Perseverance செவ்வாயில் நீண்டகாலம் தன் வாழ்நாளை செலவிட இருக்கிறது. அது தரையிறங்கும் அந்த திக் திக் நிமிடங்களைத் தான் நாம் நேரடி ஒளிபரப்பாக காண இருக்கிறோம். நாசாவின் அனைத்து சோசியல் மீடியா தளங்களிலும் இதற்கான இணைப்பு கிடைக்கும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பிப்ரவரி 18-ம் தேதியை. அன்று நள்ளிரவு 12:45 முதல் நாசா தன் நேரடி ஒளிபரப்பைத் துவங்குகிறது.
இந்த நிகழ்வின் லைவ் நாசாவின் அனைத்து சோசியல் மீடியா தளங்களிலும் கிடைக்கும். உங்கள் வசதிக்காக நாசாவின் யூட்யூப் தளத்தின் லிங்க் இதோ!

அடுத்து ஸ்பேஸ்எக்ஸ் (SpaceEx) நிறுவனத்தின் செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் ஸ்டார்ஷிப் விண்கலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களுடன் சந்திக்கிறேன்.




இந்த நிகழ்வை மிக அழகாக விளக்கப்படமாக வரைந்திருக்கிறார் Tony Bela என்பவர். அது இதோ உங்களுக்காக....


டிஸ்கி: ஜனவரி 2021-ல் ஃபேஸ்புக்கில் தொடராக நான் எழுதிய பதிவின் தொகுப்பு!

No comments:

Post a Comment