Thursday 25 May 2017

அலெக்சாண்டரின் குதிரை!

அபியும் நானும் படம் பார்த்திருப்பீர்கள். அதில் பிரகாஷ்ராஜ் தன் மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக பரீட்சைக்கு விழுந்து விழுந்து படிப்பார். அலெக்சாண்டரின் குதிரை பெயர் கேட்பார்கள் என்று நண்பர் சொல்ல அதற்கு விடை தேடி அலைவார்.
உங்களுக்கு அந்தக்குதிரையின் பெயர் தெரியுமா?
பேரழகின் உருவமாக சிலிர்க்க வைக்கும் அழகோடு நின்று கொண்டிருந்தது அது. சிறுவனான அலெக்சாண்டரின் தந்தை பிலிப்சுக்கு பரிசாக வந்திருந்த குதிரை அது. அரண்மனை அருகிலேயே இருந்த லாயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தன் அமைச்சர்களுடன் அதனைப் பார்வையிடச் சென்றார் மன்னர் பிலிப்ஸ். குதிரையேறும் வீரர்கள் அதன் மீதேறச் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. யாருக்கும் அடங்க மறுத்தது அது. சிறுவனான அலெக்சாண்டரும் அமைதியாக அந்தக் குதிரையின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
முரட்டுக்குதிரையைப் போய் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்கக் கூடாது தான். இந்தக் குதிரையினால் ஒன்றும் பயனில்லை என்று கோபமுற்ற அரசர் பரிசளித்த தெசாலிக்கே (Thessaly) திரும்ப அனுப்ப உத்தரவிட்டார்.
அழகான அக்குதிரையை விட்டுவிட அலெக்சாண்டருக்கு மனமில்லை. தான் அந்தக்குதிரையை அடக்கிக்காட்டுவதாக தந்தையிடம் சொன்னார். ஆனால் பிலிப்சோ அதற்கு மறுத்து விட்டார். குதிரையை கையாளும் பயிற்சி பெற்ற வீரர்களாலேயே அடக்க முடியாத குதிரையை சிறுவனான அலெக்சாண்டர் கட்டுப்படுத்த முடியுமா? ஆனால் கெஞ்சிக் கூத்தாடி இறுதியில் ஒருவழியாக சம்மதம் பெற்றார் அலெக்சாண்டர்.
ஏற்கனவே குதிரையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்ததில் அந்தக் குதிரையின் நிழல் அதனைப் பயமுறுத்தும் விதத்தில் கீழே விழுந்து கொண்டிருந்ததைக் கவனித்திருந்தார். இதன் காரணத்தினாலேயே அது முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
மெதுவாக குதிரையை அணுகினார், அதன் லகானைப் பிடித்தார். கழுத்துப்பகுதியை தட்டிக்கொடுத்து நீவி விட்டார். எந்தக்குதிரைக்கும் தன்னை ஒருவன் அணுகினால் அவன் எதற்காக அணுகுகிறான் என்பது அதன் உள்ளுணர்வுக்குப் புரியும். தான் அதனை தொந்தரவு செய்ய வரவில்லை என மென்மையாக அதன் காதில் சொன்னார்.
பத்தொன்பது வயதில் மன்னராகி வெறும் பன்னிரெண்டு ஆண்டுகளில் உலகையே வென்று முப்பத்தி இரண்டு வயதில் மறைந்த மாவீரன் அலெக்சாண்டர். அதன் உள்ளுணர்வுக்கு புரிந்ததோ என்னவோ சற்று அமைதியாக நின்றது. அதன் நிழல் அதன் கண்களுக்குத் தெரியாதவாறு திருப்பி நிறுத்தினார். பொறுமையாக அதன் மீது ஏறி உற்சாகப்படுத்தி ஓடச்செய்தார். பாய்ந்தோடியது புசபாலஸ். (Bucephalus) ஆம். அலெக்சாண்டரின் குதிரை பெயர் அது தான்.
பிலிப்ஸ் தன் மகனை உச்சி மோர்ந்து மசடோனியாவை விட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவப்போகிறாய் என்று பாராட்டினார். அவரது அந்தக் கணிப்பும் புசபாலஸ் ஓரு சிறந்த குதிரை என்ற அலெக்சாண்டரின் கணிப்பும் மிகச்சரியாகவே இருந்தது. அலெக்சாண்டர் எளிதில் அதன் மீது ஏறும் விதத்தில் மண்டியிட்டு அமர்ந்து அவரை ஏற்றுக்கொள்ளும். போர்க்குதிரைகள் பல இருந்தாலும் புசபாலஸ் அலெக்சாண்டரின் தனித்துவமிக்க குதிரையாக திகழ்ந்தது.
அலெக்சாண்டரின் வெற்றிகளிலெல்லாம் புசபாலஸின் பெயர் கூடவே பயணித்தது. சில சமயங்களில் அலெக்சாண்டரைத் தவிர வேறு எவரையும் அதன் மீது ஏறிப் பயணிக்க அனுமதிக்கவில்லை. இனி வெல்வதற்கு இந்த உலகில் எதுவுமிலலை என வாழ்ந்து சரித்திரம் படைத்த அலெக்சாண்டர் தனது போர்ப்பயணங்களுக்கெல்லாம் இதனையே அவர் பயன்படுத்தினார்.
அவ்வாறான போர்களில் (Hydaspes) ஒன்றில் மோசமாக காயம் பட்டிருந்தது புசபாலஸ். அலெக்சாண்டரும் மிகவும் களைப்புற்றிருந்தார். தன் எஜமானனை அவ்விடத்திலிருந்து வெகு தூரத்திற்கு சிரமத்துடன் சுமந்து சென்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்த பின்னர் கீழே விழுந்து இறந்தது புசபாலஸ். ஆனால், அதிலிருந்து குணமடைந்து 30 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் இறந்தது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு அதன் நினைவாக அவ்விடத்தில் ஒரு நகரமும் நிர்மாணம் செய்யப்பட்டது. அந்த நகரத்தின் பெயர் புசபாலியா! (தற்போது பாகிஸ்தானில் உள்ளது!)