Wednesday 7 August 2013

ஒரு உதவி செய்றீங்களா?



நேற்று சாயங்காலம் பரபரப்பான வேலைகளுக்கிடையே (ஹி ஹி! இங்க தான்!) வந்த ஒரு குறுஞ்செய்தி கவனத்தை ஈர்த்தது. நான் ரத்ததானம் செய்பவன் என்ற முறையில் சில வெப்சைட்களில் பதிவு செய்திருக்கிறேன். அப்படி ஒரு வெப்சைட்டிலிருந்து வந்த செய்தி தான் அது.

ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாகவும் அப்போலோ கேன்சர் மருத்துவமனையில் வந்து ரத்தம் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அலுவலகப் பணிகளுக்கு பிறகு நேராக அப்போலோ கேன்சர் மருத்துவமனையை அடைந்தேன். மெசேஜை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டேன். 

ரிசப்சன்/என்கொயரி எங்கே என கண்கள் தேடின. அப்படி ஒன்றுமே அங்கில்லை. ரெஜிஸ்ட்ரேசன் என ஒரு கவுண்டரும், அட்மிசன் என ஒரு கவுண்டரும் மட்டுமே அங்கிருந்தது. 

நடமாடிய மனிதர்களில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்களே நிறைய பேர். கேன்சர் எனும் உயிர்க்கொல்லி நோய்க்கு சிகிச்சை தேடி கண்டம் விட்டு கண்டம் வந்துள்ளனர்.

ரெஜிஸ்ட்ரேசன் கவுண்டரை அனுகி விபரத்தைச் சொன்னேன். அவர் லேப் பக்கத்தில் உள்ள வேறு பில்டிங்கில் இருப்பதாகவும் அங்கு சென்று தானம் செய்யச் சொல்லி விட்டு அவரது வேலையைத் தொடர்ந்தார். (சும்மா தான் உட்காந்திருந்தார்!)

எனக்கு வந்த குறுஞ்செய்தியில் தானம் வேண்டிய நபரில் மொபைல் எண்ணும் இருந்தது. அதனால் லேப் செல்லுவதற்கு முன் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாம் என கால் செய்தேன். கிடைக்கவில்லை. மொபைல் எண்ணுடன் 0 சேர்த்து டயல் செய்தேன். கிடைத்தது. 

(உரையாடல் ஆங்கிலத்தில்)

“வணக்கங்க, என் பேரு ***, ப்ளட் வேணும்னு கேட்டு உங்களோட மெசேஜ் எனக்கு வந்தது. அதான் வந்திருக்கேன். நான் இப்ப “A” ப்ளாக் கீழே நின்னுகிட்டிருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?”

“சார், ரொம்ப நன்றி சார். நீங்க முடிஞ்சா மூணாவது மாடி போங்க சார். அங்க தான் பேசண்ட் இருக்காரு. நான் இப்போ நெல்லூர்ல இருக்கேன்” (ஆந்திரா) என்றார்.

மிகவும் படபடப்பாக இருந்தார்.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லீங்க, நான் மொதல்ல லேப்ல போய் ப்ளட் குடுத்துட்டு போய் பாக்குறேன். நீங்க கவலைப் படாதீங்க” என்று விட்டு நான்காவது மாடியிலிருந்த லேபை அணுகினேன்.

அங்கிருந்த லேடி சுவாரஸ்யமாக அவரது கம்ப்யூட்டரை ஆராய்ந்து கொண்டே வேறொரு அலுவலக நபரோ பேசிக் கொண்டிருந்தார்.

“மேடம், நான் ப்ளட் டொனேட் பண்ண வந்தி….”

“இப்ப பண்ண முடியாது சார். எல்லாம் நாளைக்கி தான்.”

“ஏங்க?”

“இப்ப டைம் முடிஞ்சி போச்சி. நீங்க போய்ட்டு நாளைக்கி காலைல வாங்க!”

“என்னங்க இது, ஒரு பேசண்ட் உயிருக்கு போராடிக்கிட்டிருக்காரு, அவருக்கு ப்ளட் வேணும்னு மெசேஜ் கெடச்சு நான் வேலை மெனக்கெட்டு வந்திருக்கேன். நீங்க கூலா….”

நிமிர்ந்து என்னை அப்போது தான் பார்த்தார்.

“சார், அஞ்சரை மணி வரைக்கும் தான் ப்ளட் டொனேட் பண்ண முடியும். நீங்க போய்ட்டு நாளைக்கு காலைல வாங்க”

அதற்கு மேல் அவரிடம் பேசி புண்ணியமில்லை என்று தெளிவாக புரிந்தது.

மீண்டும் கீழே வந்து ரெஜிஸ்ட்ரேசன் கவுண்டரிலிருந்த நபரை அனுகினேன்.

”என்ன சார் இது? ஒரு ப்ளட் டொனேட் பண்றதுக்கு இவ்ளோ சிக்கலா? இதுக்கெல்லாமா டைம் வச்சி வாங்குவிங்க?”

“என்ன சார் ஆச்சு”

“டைம் முடிஞ்சி போச்சுன்றாங்க. நாளைக்கி தான் எடுத்துப்பாங்களாம்” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது எனக்கு அழைப்பு வந்தது.

அழைத்தவர் நெல்லூர்க்காரர்.

“இதோ பாருங்க பேசண்ட் சைட்லேருந்து வேற கூப்புடறாங்க”

அவர் “இருங்க சார். நான் கேக்குறேன்” என்றார். போன் செய்தார். பேசினார். வைத்தார். என்னை செய்வதறியாது பார்த்தார்.

நான் போனை அட்டெண்ட் செய்தேன். “ஹலோ சார். ஐயாம் சாரி. நான் உங்களுக்கு இப்போ ஹெல்ப் பண்ணமுடியாத நிலைல இருக்கேன். இங்க ப்ளட் டொனேசன்லாம் இப்ப வாங்க மாட்டாங்களாம். நாளைக்கு தான் வரணுமாம்.”

”...............”
”இல்லீங்க இப்ப எடுத்துக்க மாட்டாங்களாம். நான் இதுக்காக நாளைக்கு வரமுடியாதுன்னு சொன்னேன். ஆனாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்றாங்க, அதனால நான் இப்ப கெளம்புறேன்”

எதிர்முனையில் நிலைமையை புரிந்து கொண்ட அமைதி நிலவியது.

சிறிது நேரம் கழித்து அவர் நடுங்கும் குரலில் கேட்டார், “சார், நீங்க பேசண்ட ஒரு தடவ பாத்து ‘உங்களுக்கு ஒண்ணும் இல்லை, நல்லாயிருவீங்க, நாங்கள்லாம் இருக்கோம்’னு சொல்றீங்களா?”
****

No comments:

Post a Comment