Wednesday 20 December 2017

மர்மங்கள் நிறைந்த டுங்குஸ்கா நிகழ்வு – இன்றும் அவிழாத முடிச்சுகள்!

சைபீரியாவின் டுங்குஸ்கா ஆறு சலசலவென ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக பனியால் மூடப்பட்டிருக்கும் பிரதேசம் அது. வெய்யில் காலம் அப்போது தான் துவங்கியிருந்தது. அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர்கள் தொலைவில் தனது கலைமான்களின் தோலினால் செய்யப்பட்ட குடிலில் விழித்தபடி படுத்திருந்தார் எவென்கி பழங்குடியினரான முதியவர் ஒருவர்.

‘அயால்டி’ என்று முணுமுணுத்துக்கொண்டார். எவென்கி மொழியில் நற்காலை வணக்கங்கள். இன்றைய நாள் இனிதே துவங்க வேண்டும். அவரிடம் 200 கலைமான்கள் இருந்தன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தவிர மகனை அருகிலிருக்கும் தோல் பதப்படுத்தும் இடத்திற்கு போகச்சொல்ல வேண்டும். வெகு நாட்களாக தேங்கிக் கிடக்கிறது.

எழுந்து வெளியில் வந்தார். திடீரென்று வானம் இரண்டாக பிளந்தது போல் இருந்தது. வானமே எரிவது போல தெரிந்தது. இடி முழக்கம் கேட்டது. கண்களைக் குருடாக்கும் ஒளி எங்கும் பரவியது. தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். கடைசியில் அவரது காதில் கேட்ட ஓசை அவரது முதுகெலும்பு முறியும் ஓசை.

சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்த போது வானத்தில் காளான் குடை போன்று கரும்புகை பரவிக்கொண்டிருந்தது. கரிய நிறத்தில் தார் போன்று மழை பெய்யத்துவங்கியது. அசையமுடியாமல் குரலெழுப்பி மகனை அழைத்தார். மனிதர்கள் இயற்கையை அழிப்பதனால் அக்டா கடவுள் கோபித்துக் கொண்டார். இயற்கையின் சக்திக்கு முன் நாம் ஒன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே மீண்டும் நினைவு தப்பியது.

சேகரென் மற்றும் சுச்சான் எனும் சன்யாகிர் பழங்குடியின சகோதரர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரெனெ சூடான காற்று அவர்களைச் சுற்றிப் பரவியது. யாரோ தூக்கி எறிந்தது போல் பத்தடி தள்ளிப்போய் விழுந்தனர். என்ன நடந்தது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். மீண்டும் அவர்களை யாரோ தூக்கி எறிந்தார்கள். இப்போது அவர்கள் விழுந்த இடம் நெருப்பினால் தகித்துக் கொண்டிருந்தது. இருவரும் அலறினர். காலுக்கு கீழே பூமி அதிர்ந்து நகர்ந்தது.

வானிலிருந்து மாபெரும் கல் ஒன்று விழுந்தது போன்று ஒரு பெரும் இடிமுழக்க ஓசை கேட்டது. தொலைவிலிருந்த தேவதாரு மரங்கள் முறிந்து கீழே சாய்ந்தன. சில மரங்கள் எரியத்துவங்கின. நூற்றுக்கணக்கான பீரங்கிகள் வானிலிருந்து குண்டுகளைப் பொழிவது போலிருந்தது. கண்ணைக் குருடாக்கும் வெளிச்சம் பரவியது. இருவரும் கண்களை மூடிக்கொண்டனர். மீண்டுமொரு முறை இடியோசை கேட்டது.  உலகம் அழிந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டனர். இடியோசை தொடர்ந்து பதினான்கு முறை கேட்டது.

அது 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் காலை 07:17 மணி. வானிலிருந்து சூரியனை விட பிரகாசமாக ஒளிப்பிழம்பு ஒன்று வேகமாக பூமியை நோக்கி வந்தது. விண்ணில் சுமார் 10 கிலோமீட்டர் உயத்திலேயே அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஒரு பலத்த வெடிச்சத்தத்துடன் சிதறியது. அது உண்டாக்கிய அதிர்வலைகளால் பூமியே அதிர்ந்தது. வானமே இரண்டாக பிளந்தது போலானது. பீரங்கிக் குண்டுகள் முழங்குவது போன்று ஒலியைத் தொடர்ந்து நெருப்பு ஜுவாலையாக பரவியது.

2000 சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு அங்கிருந்த டாய்கா காடு அழிந்தது. 80 கோடி மரங்கள் எரிந்து சாம்பலாயின. ஏராளமான கலைமான்கள் உள்பட காட்டு உயிரினங்கள் கருகின.


                                                   Art courtesy : William K. Hartmann

ரிக்டர் அளவுகோலில் 6-ம் எண் அதிர்வு அலைகள் உணரத்தக்கதாக அதிர்வு இருந்தது. இந்த வெடிப்பின் மூலம் வெளிப்பட்ட சக்தியானது ஹிரோசிமாவில் வெடித்த அணுகுண்டை விட 1000 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகும். வெடிப்பிற்கு பிறகு காந்தப்புயல் வீசியது. திசைகாட்டிகள், மின்னணு சாதனங்கள் வேலை செய்யவில்லை. இடியோசை போன்ற அந்த ஒலி 800 கிலோமீட்டர் தொலைவிற்கு கூட கேட்டது. இந்த வெடிப்பின் ஓசை மூன்று லட்சத்து எண்பதாயிரம் சதுர கிலோமீட்டர்கள் தொலைவுக்கு உணரப்பட்டதாக மிரோவடெனியெ எனும் பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.

தற்போது இருப்பது போன்று தகவல் தொடர்பு இல்லாத அந்தக்காலத்தில் இந்த பெருவெடிப்பு நிகழ்வு உலகின் பிறபகுதிகளுக்கு போய்ச் சேரவில்லை.
இது நிகழ்ந்த நாட்களின் முன்னும் பின்னும் வானில் துருவப்பகுதிகளில் நிகழும் அரோரா சுடரொளிகள் போன்ற வண்ணக் கலவையாக தோற்றமளித்தது. ஒரு மாதகாலத்துக்கு இரவு வெளிச்சம் நிறைந்ததாகவும் வானம் வண்ணக்குழம்பாக காட்சியளித்தது.


நியூயார்க் டைம் பத்திரிக்கையில் வானில் நிகழும் அதிசயம் என்று இந்த வண்ண ஒளிகளைப் பற்றிச் செய்தி வெளியிட்டது.  ரஷ்யாவில் ஏதோ பெரியதாக நிகழ்ந்திருக்கிறது என்ற அளவு மட்டுமே விஷயம் தெரிய வந்திருந்தது. என்ன நிகழ்ந்தது என்பதை உலகம் அறிந்திருக்கவில்லை.

இந்த வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்று பல கோட்பாடுகள் உலவுகின்றன.

கோட்பாடு 1 – விண்கற்கள் :

பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு இதுவே.

டுங்குஸ்கா நிகழ்வு 1908-ஆம் ஆண்டே நிகழ்ந்தாலும் அதைப்பற்றிய முதல் ஆராய்ச்சி நடக்க 19 ஆண்டுகள் பிடித்தது. மனிதநடமாட்டம் இல்லாத பகுதி என்ற காரணம் ஒன்று. தவிர ரஷ்ய அரசும் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. முதல் உலகப்போர் மூளும் அபாயம் இருந்த நேரம் அது. மேலும் ரஷ்யப்புரட்சி வெடிக்கும் சூழ்நிலை வேறு இருந்தது.

1920 முதல் பீட்டர்ஸ்பர்க் கனிமவியல் அருங்காட்சியகத்தில் லியோனிட் குலிக் என்பவர் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார். அவரது வேலைகளில் ஒன்று சோவியத் யூனியனில் விழும் விண்கற்கள், எரிகற்களைச் சேகரித்து ஆராய்வதாகும்.


அவருக்கு 1908-ல் டுங்குஸ்காவில் நிகழ்ந்த சம்பவம் குறித்த தகவல் கிட்டியது. அது விண்கல்லாகத்தான் இருக்கும் என்று எண்ணிய அவர் 1921-ல் முதற்கட்ட பயணத்தை மேற்கொண்டார். சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் பேசினார். அவற்றைப் பதிவு செய்து கொண்டு திரும்பினார். மீண்டும் 1927-ல் பயணித்து டுங்குஸ்காவிற்கு அருகிலிருக்கும் வனவர வர்த்தக நிலையத்தினை அடைந்தார். (இந்தப் பகுதிகளின் பெயர்களுக்கும், வாழும் மனிதர்களின் பெயர்களுக்கும் தமிழோடு தொடர்பிருப்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.)

அங்கு சென்று சேர அவருக்கு இரண்டு மாதங்கள் பிடித்தது. அங்கிருந்த எவெங்கி பழங்குடியினரின் துணையோடு மிகுந்த இன்னல்களோடு சம்பவ இடத்தை அடைந்தார். முதலில் அந்த பழங்குடியினர் அங்கு வர சம்மதிக்கவே இல்லை. கடவுள் தண்டித்த இடம், அக்டா கடவுளால் சபிக்கப்பட்ட இடம் என்று அவர்கள் தயங்கினார்கள். சிறிது நாட்கள் கழித்து ஓருவழியாக சம்மதிக்க வைத்து அந்த இடத்தை நெருங்கும் போது எங்கும் மரங்கள் எரிந்து விழுந்து கிடப்பதைக் கண்டார். 



வெடிப்பு நிகழ்ந்த மையப்புள்ளியிலிருந்து பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு மரங்கள் விழுந்து கிடந்தன.  அவை சைக்கிளில் உள்ள ஆரங்கள் போன்று விழுந்திருந்தன. ஆனால் அவர்களால் அங்கு விண்கல்லின் மிச்சத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மோதிய விண்கல்லின் எந்த ஒரு தடயமும் சிக்கவில்லை. மோதியதால் ஏற்படும் பள்ளமும் காணப்படவில்லை. அவர்கள் கண்டதெல்லாம் பெருமளவில் சாய்ந்து கிடக்கும் தேவதாரு மரங்களை மட்டுமே.  அதிலும் பெருமளவு மரங்கள் விழுந்து கிடக்க ஒருசில மரங்கள் முழுமையாக நின்று கொண்டிருந்தன. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் மூலமாகவே உலகின் பிற பகுதிகளுக்கும் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது.

குலிக் குழுவினரின் மூன்றாவது பயணத்தின் போது அங்கு துளைகளிட்டு சோதனை செய்து பார்த்தனர். ஆயினும் இது விண்கல்லின் விளைவு என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

குலிக்கும் அவரது குழுவினரும் 1939 வரை பத்து முறை பயணம் மேற்கொண்டு மண் மாதிரிகளை எடுத்து வந்தனர். பின்னர் குலிக் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று நாசிப்படைகளால் பிடிபட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் ஒருவித நச்சுக்காய்ச்சலால் 1942-ல் இறந்து போனார்.

1957-ல் ரஷியாவைச் சேர்ந்த கனிமவியலாளரான யாவ்னில் என்பவர் குலிக் குழுவினர் கொண்டு வந்திருந்த மண்மாதிரிகளைச் சோதனை செய்து அதில் நிக்கல், கோபால்ட் போன்ற தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தார். இதனால் வெடிப்புக்குள்ளானது ஒரு இரும்பு விண்கல் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பின்னாளில் அவர் சோதனை செய்த மண்மாதிரி டுங்குஸ்காவிலிருந்து கொண்டு வந்தது அல்ல எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 1947-ல் சிக்கோட்-அலின் எனும் மலைப்பகுதியில் விழுந்த விண்கல்லின் மாதிரி இடம் மாறியிருந்தது தெரியவந்தது.

அருகாமையிலிருந்த செக்கோ ஏரியில் இந்த விண்கல்லின் பாகம் இருக்கக்கூடும் என்று 2007-ல் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒரு கருத்தை முன்வைத்தனர். ஏனெனில் அந்த ஏரியானது இந்த வெடிப்பிற்கு முன்னர் இருந்திருக்கவில்லை. காஸ்பெரினி எனும் விஞ்ஞானி அந்த ஏரியின் ஆழத்தில் 10 மீட்டர் விட்டமுள்ள விண்கல்லின் பாகம் கண்டிப்பாக இருக்கிறது என்றார்.

அது ஆழமான ஏரியில்லை என்பதால் ரஷ்யர்கள் அடியில் சென்று துளையிட்டுப் பார்த்தால் கிடைத்துவிடும் என்ற அவரது கருத்தை 2008-ல் அவரே மறுதலிக்க நேர்ந்தது. ஏனெனில் விண்கல் ஏரியில் விழும் பாதையில் நன்கு வளர்ந்த மரங்கள் முழுமையாக இருந்தன. அவை எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டும் அல்லது கீழே சாய்ந்திருக்க வேண்டும். இரண்டுமே நடவாததால் இக்கருத்தும் பொய்த்துப் போனது. பின்னாட்களில் அந்த ஏரி 280 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

1966-ல் வாசிலி ஃபெசென்கோவ் என்பவர் டுங்குஸ்காவில் விழுந்த விண்கல்லின் பயணத்தைக் கணித்துச் சொன்னார். சூரியனை ஏராளமான விண்கற்கள், குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழையும்போது சிறு விண்கற்கள் எரிந்து விடுகின்றன. இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. நமது வளிமண்டலம் வலிமையானதாகையால் அது நம்மைப் பாதுகாக்கிறது. பூமியின் பரப்பில் பெரும்பகுதி கடலாதலால் நம் கவனத்திற்கு வரவில்லை.

ஆனால் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்த பெரிய அளவிலான விண்கல் டுங்குஸ்காவில் வெடித்துச் சிதறியது தான். இது சைபீரியாவில் விழுந்திருந்தால் 5 லட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும். மனித நடமாட்டமில்லாத இடத்தில் விழுந்ததால் மனித இனம் பிழைத்தது.

1972-ல் கூட ஒரு நெருப்புப்பந்து போன்று எரிகல் பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து உரசியவாறு சென்றது.  US19720810 என்று பெயரிடப்பட்ட அந்த எரிகல்லின் வீடியோ, புகைப்படப்பதிவுகள் The great daylight fireball என்று கூகுளில் தேடினால் கிடைக்கும். பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து சென்றமையால் அதன் பாதை சிறிது மாற்றமடைந்திருக்கிறது.

அது மட்டும் விழுந்திருந்தால் சைபீரிய விண்கல்லைப்போன்றொரு பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கும். அது கனடா நாட்டின் மேல் விழப்போவதாக அவதானிக்கப்பட்டது. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் கனடா எனும் நாடே இல்லாமல் போயிருக்கக்கூடும். அந்த எரிகல்லின் வீடியோ இதோ:




2013-ல் யூரல் மலைத்தொடர் அருகே அமைந்துள்ள செல்யாபின்ஸ்க் எனுமிடத்தில் 20 மீட்டர் நீளம் கொண்ட ஒரு எரிகல் வானில் சுமார் முப்பது கிலோமீட்டருக்கு மேல் வெடித்து சிதறியது. அதனால் வெளிப்பட்ட வெடிப்பு அலைகளினால் சுமார் 8000 கட்டடங்களில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. 2000 பேருக்கு மேல் காயமுற்றார்கள்.

இதன் வெளிச்சமானது சூரியனை விட பிரகாசமாய் இருந்தது. அதீத வெளிச்சத்தினால் நிறைய பேருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டது. தோல் எரிச்சல் ஏற்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாகையால் பள்ளிகள், தொழிற்சாலைகள் என அனைவருக்கும் விடுமுறையளிக்கப்பட்டது. கீழே அதன் வீடியோ பதிவைக் காணலாம்.


சூரியனின் பின்புறமிருந்து வந்ததனால் செல்யாபின்ஸ்க் எரிகல் சூரிய ஒளியால் மறைக்கப்பட்டிருந்தது. பூமியின் வளிமண்டலத்தை அடையும் வரை அது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஒளிப்பிழம்பாய் இந்த விண்கல் வானில் செல்வதை பலர் படம் பிடித்துள்ளனர். யூட்யூபில் நிறைய காணொளிகளும் கிடைக்கின்றன.
இதன் இயக்க ஆற்றலானது ஹிரோஷிமா அணுகுண்டை விட 35 மடங்கு அதிகமானதாகும். கிட்டத்தட்ட 500 கிலோ டன் எடை கொண்ட அணுகுண்டை ஒத்திருந்தது.
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரிசோனா மாகாணத்தில் விழுந்த விண்கல்லினால் ஏற்பட்ட மாபெரும் பள்ளம் இன்றும் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அது ஏற்படுத்திய வெடிப்பதிர்வு 3.5 மெகாடன் அணுகுண்டை போன்றது.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்த சிக்சுலுப் விண்கல் டைனோசர்கள் உள்பட பூமியில் இருந்த உயிரினங்களையும் பூண்டோடு அழித்தது. இந்த விண்கல் சுமார் 15 கிலோமீட்டர் அளவு விட்டமுடையதாக இருந்தது. இதன் பள்ளம் தற்போதும் மெக்சிகோவில் உள்ள யுகாடன் தீபகற்பத்தில் இருக்கிறது.

இன்றும் டுங்குஸ்காவின் விண்கல் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. டுங்குஸ்கா நிகழ்வு குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ரஷ்யாவில் வெளியாகியிருக்கின்றன. 1949-ல் கண்டுபிடிக்கப்பட்ட படோம்ஸ்கி எனும் பெரிய பள்ளம் டுங்குஸ்கா விண்கல்லால் ஏற்பட்டது தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது 300 வருடங்கள் பழமையானது.




சில சந்தேகங்கள்:

டுங்குஸ்கா நிகழ்வில் கீழ்க்கண்ட விஷயங்கள் கேள்விக்குறியவை:

1. பொதுவாக விண்கற்கள் திசையை மாற்றிப் பயணிக்காது. டுங்குஸ்காவில் வெடித்த பொருள் தெற்கு திசையிலிருந்து வந்தது. வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் கெஷ்மா என்ற இடத்தின் மேலிருக்கும் போது அது அதன் திசையை திடீரென கிழக்கு நோக்கி மாற்றிக் கொண்டது.

2.      ப்ரியோப்ரெசென்கா எனும் இடத்தின் மேல் செல்லும்போது வடக்கு திசையை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டு டாய்கா காடுகளின் மேல் 10 கிலோ மீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது.

3.      விண்கற்கள் விடியற்காலையில் பூமியைத் தாக்குவது அபூர்வமான நிகழ்வாகும்.

4.      பூமியின் வளைவு காரணமாக செர்பியாவில் காலை 7:17-க்கு கிடைக்கும் சூரிய ஒளி அதே நேரத்தில் லண்டனில் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. அதே போல வெடிப்பின் போது கிடைத்த ஓளிச்சிதறல் பூமியின் மறுபுறம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால், அங்கும் பலர் பார்த்ததாக தெரிவித்திருக்கின்றனர்.

மேற்கண்ட சந்தேகங்கள் இரண்டாவது கோட்பாட்டிற்கு வலுசேர்த்தன. அது நிகோலோ டெஸ்லா எனும் மாபெரும் மேதையின் ஒளிக்கதிர்.

கோட்பாடு 2 – டெஸ்லாவின் ஒளிக்கதிர் :

1908-ல் இந்நிகழ்வு நடந்த அதே சமயம் நியூயார்க் நகரத்தில் தனது வார்டன்க்ளீஃப் கோபுரத்தில் மூலம் கம்பியில்லா மின்சாரம், தகவல் தொடர்பு கதிர்களை உருவாக்கும் சோதனையில் ஈடுபட்டிருந்தார் நிகோலா டெஸ்லா. அதாவது மின்சாரம் கடத்த கம்பியோ, மின்நிலையங்களோ எதுவும் தேவையில்லை. வானில் கதிர்களைச் செலுத்தி பூமியின் மூலமாகவே மின்சாரத்தைக் கடத்தும் தொழில்நுட்பம். அதில் உருவான அழிவுக்கதிர்கள் தான் இந்த வெடிப்புக்குக் காரணம் என்றனர் சிலர்.

 டுங்குஸ்கா வெடிப்பு நிகழ்வதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு டெஸ்லா ஒருவரை வாஷிங்டன் நூலகத்திற்கு அனுப்பி சைபிரியாவின் வரைபடத்தை, அதிலும் டுங்குஸ்கா பகுதியின் வரைபடத்தைப் பெற்று வரச்செய்தார். இதையும் ஆதாரமாகச் சொல்கிறார்கள்.  வார்டன்க்ளீஃப் கோபுரத்தின் மின்தேக்கி மூலம் 100 கோடி வோல்ட் அளவிலான மின்சாரத்தை பெறும் வசதி இருந்தது என்கிறார் இந்தக்கருதுகோளை தீவிரமாக நம்பும் ஸ்ட்ரெப்கோவ்.


1917-ல் அமெரிக்க ராணுவம் வார்டன்க்ளீஃப் கோபுரத்தை வெடிவைத்துத் தகர்த்தது. அந்த சமயம் டெஸ்லா ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிகாகோ ரயில் நிலையத்தில் இது குறித்த தந்தி அவரிடம் தரப்பட்டது. அவர் அதை வாங்கினார். பிரித்துப் படித்தார். மீண்டும் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அவர் வாழ்வின் இறுதி வரை டெஸ்லா டவர் இடிக்கப்பட்டது குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

டெஸ்லாவின் ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இந்த உலகில் அனைவருக்கும் இலவச மின்சாரம் கிடைத்திருக்கும். அந்த ஆராய்ச்சியை தொடர விடாமல் தடுத்தவர்கள் யாரென்று அவரது ஆருயிர் நண்பரான எடிசனுக்கே வெளிச்சம்(!)

கோட்பாடு 3 – இயற்கை எரிவாயு :

இயற்கை எரிவாயு பூமியின் 3000 அடி ஆழத்தில் திரவநிலையில் இருந்த அது பீரிட்டு வெளி வந்த போது வாயுவாக மாறி விரிவடைந்து வெடித்திருக்கக்கூடும் என்று இயற்பியல் விஞ்ஞானியான குண்ட் கருதினார். இதற்கு ஆதாரமாக மரங்கள் விழுந்து கிடக்கும் முறையையும் அங்கு கிடைத்த இரசாயனங்களின் மாதிரியையும் எடுத்துக் காட்டினார்.

கோட்பாடு 4 – கருந்துளை :

அண்டவெளியில் ஒரு கருந்துளையானது நமது பூமியின் அருகில் வந்தபோது வெடித்துச் சிதறியது என்பது அமெரிக்க விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ரியானின் கருத்து. 1973-ல் இந்தக்கருத்தை முன்வைத்தார்கள். மேலும் விண்கல் வெடித்திருந்தால் அதன் சிறு பகுதி கூட ஏன் கிடைக்கவில்லை என்பதை ஆதாரமாகக் கூறினர். ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

கோட்பாடு 5 – ஏலியன் விண்கலம் :

அலெக்சாண்டர் கசன்செவ் எனும் ரஷ்ய அறிவியல் எழுத்தாளர் இது வேற்றுக்கிரக வாசிகளின் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து வந்தபோது அதில் கோளாறு ஏற்பட்டு அணு வெடிப்பு ஏற்பட்டது என்றார். 1946-ல் இந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்தார்.

ஹிரோசிமாவில் நிகழ்ந்த அணுகுண்டு வெடிப்பினால் அங்கு அழுத்த அலைகள் ஏற்பட்டு அங்கிருந்த மரங்களின் கிளைகள் முறிக்கப்பட்டு இலைகள் உதிர்ந்து எப்படிக்காணப்பட்டனவோ அது போலவே இங்கும் காணப்பட்டதை ஆதாரமாகக் காட்டினார். மேலும் மரங்களின் மேல் காணப்பட்ட எரிந்த தடயங்கள் கதிர்வீச்சினால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக ஒரு புறமாக மட்டுமே காணப்பட்டது. இது அவரது கூற்றுக்கு மேலும் வலு சேர்த்தது.

கோட்பாடு 6 – வால்மீன் :

1930-களில் விப்பிள் எனும் வானவியல் நிபுணர் இது ஒரு வால்மீன் என்கிறக் கருத்தை முன் வைத்தார். விண்மீன்கள் பெரும்பாலும் பனிக்கட்டிகளாலும் விண் தூசுகளாலும் ஆனவை. இதனால் இவை அழுக்குப் பனிப்பந்துகள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றன.

 நமது வளிமண்டலத்தை அடைந்ததும் வால்மீனிலிருந்த பனிக்கட்டிகள் உருகத்தொடங்கி வெடித்துச் சிதறி ஒன்றுமில்லாமல் போயின என்றார் அவர். டுங்குஸ்காவில் எந்தவித அன்னியக் கனிமங்களும் கிடைக்காததால் இந்த முடிவு ஏற்கத்தக்கதாக இருந்தது.

கோட்பாடு 7 – பொருளும் அதன் நிழல் பொருளும் :

அதென்ன நிழல்பொருள்? எதிர்ப்பொருள் தானே சரி என்று கேட்கலாம். அல்ல. எதிர்ப்பொருள் என்பது வேறு, நிழல் பொருள் என்பது வேறு. மேலும் இந்த நிழல்பொருள் அல்லது பிரதிபலிப்புப் பொருள் பற்றிய கோட்பாடு தனியாக அலசப்பட வேண்டியது.

இந்தக் கோட்பாடு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வைத்துக் கொண்டு இயற்பியல் விஞ்ஞானிகளே அடித்துக் கொண்டுள்ளனர். எனவே இதை நாம் விட்டுவிட்டு அடுத்து ஒரு அட்டகாசமான கோட்பாட்டுக்கு செல்வோம்.

கோட்பாடு 8 – வெர்னஷாட் :

இதென்ன புரியாத பெயராய் இருக்கிறதே என்கிறீர்களா? பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் என்ற நாவலை / திரைப்படத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கதையை எழுதியவர் ஜூல்ஸ் வெர்னே என்பவர். அவரது பெயரைத் தான் இதற்கு வைத்திருக்கிறார்கள்.

பூமியின் அடியில் உள்ள லித்தோஸ்பியருக்கும் கீழே கரியமில வாயு படர்ந்திருக்கும். அதன் மேல் கவசம் போல டெக்டானிக் தகடுகள் இருக்கும். பூமியின் மேலடுக்கு கடின பாறைகளால் தடிமனான மேலோட்டுடன் இருக்குமிடங்களில் பூமியின் காந்தப்புல இடையூறின் விளைவாக எரிவாயு அழுத்தப்பட்டு அதில் பிளவு ஏற்படும். அப்போது எரிமலைக் குழம்பு சூடான எரிவாயுக்காற்றோடு நிலத்தின் மேற்பரப்பை பெயர்த்தெடுத்து விண்ணில் ராக்கெட் செல்வது போல செலுத்தும். இது பூமியைத் தாண்டி விண்வெளிக்கே கூட அனுப்பும் அளவு வல்லமை மிக்கது.

அதன் பின்னர் புவி ஈர்ப்புச்சக்தியின் விளைவால் மீண்டும் பூமிக்கே திரும்பி வரும். இதற்குள்ளாக பூமி தன்னைத்தானே சுற்றி வருவதால் சற்று நகர்ந்திருக்கும். பெயர்த்தெடுக்கப்பட்ட பூமியின் பகுதி பூமியின் மறுபுறத்தில் போய் விழும். அதாவது இங்க இருக்கற தமிழ்நாட்டை அப்டியே தூக்கிட்டுப் போய் டெல்லிக்கு பக்கத்துல இல்லை, அமெரிக்காவுக்கு பக்கத்தில் போய் வைப்பது! நம்பும்படியாக இல்லை அல்லவா?

இதன் அதிர்ச்சி அலைகள் பூமியெங்கும் பரவக்கூடியது. டைனோசர்கள் அழிந்ததற்கு கூட விண்கல் காரணமல்ல வெர்னஷாட் தான் என்கிறார்கள்.

கோட்பாடு 9 – அக்டா கடவுளின் செயல் :

அந்தப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வந்த எவங்கி பழங்குடியினரின் நடவடிக்கைகளில் கோபமடைந்த அக்டா எனும் (இடிகளை உருவாக்கும்) கடவுள்  அவர்களைத் தண்டிக்க அனுப்பிய இடி, மின்னல்கள் தான் அழிவை உருவாக்கியது என்பது அவர்களின் வாதம்.
இன்னமும் டுங்குஸ்காவில் நிகழ்ந்தது என்ன என்பதில் ஆராய்ச்சிகள் முடிவதாக இல்லை. ஒரு மாபெரும் மர்மமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது. 



எது எப்படியோ, பூமியைத் தாக்கக்கூடிய அபாயகரமான விண்கற்களைப் பற்றியும் அவற்றின் திசையைப்பற்றியும் 95 சதவிகிதம் தெரிந்து கொண்டாகிவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள். இவர்கள் சொல்வது ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான விட்டமுடைய விண்கற்கள். அதே சமயம் 100 மீட்டருக்கும் கீழே விட்டமுடைய விண்கற்கள் பற்றிய ஆராய்ச்சி ஐந்து சதவிகத அளவு தான் முடிந்திருக்கின்றதாம். வெறும் 20 மீட்டர் விட்டமுடைய செல்யாபின்ஸ்க் விண்கல் ஏற்படுத்திய தாக்கமே பலமடங்கு வீரியமிக்கதாய் இருந்தது.

சைபீரிய விண்கல் விழுந்த இடமான டுங்குஸ்கா மனித நடமாட்டமில்லாத இடம். அதுவே தமிழ்நாட்டில் விழுந்திருந்தால் இன்று தமிழ்நாடு இந்திய வரைபடத்தில் இருந்திருக்காது. (இப்ப இருக்கற நிலைமைக்கு அதாவது விழுந்து தொலைத்திருக்கலாம் என்கிறீர்களா?)


பெட்டிச்செய்தி:

சுட்ஸ்தலேவ் எனும் வணிகர் வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து வைரங்கள் கண்டெடுத்ததாக ஒரு செய்தியும் சொல்லப்படுகிறது. இன்று டுங்குஸ்கா வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சயான்ரிங் எனும் நிறுவனத்தினர் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க்கில் க்ளிக் செய்து பயணம் செய்ய தயாராகலாம். http://www.sayanring.com/tour/view/205/

*****************************************************************************************

No comments:

Post a Comment