Monday 23 September 2013

 இவரது பெயர் கிம் பீக்.

அபார நினைவாற்றல் கொண்டவர்.

ரெண்டு வயசிலேர்ந்தே புத்தகங்களை படிக்க ஆரம்பிச்சாராம். அதுவும் எப்படி? மிகவும் வேகமாக.

வெறுமனே படிக்கறதோட மட்டுமில்லாம அப்படியே ஞாபகம் வச்சிருக்கவும் இவரால முடிஞ்சுது.

அதிலயும் பாருங்க... வேகமாக படிக்கறதுன்னா வலது கண் மூலமாக வலது பக்கத்துல இருக்கற பக்கத்தையும் இடது கண்ணின் மூலமா இடப்பக்கமிருக்கும் பக்கத்தையும் இவரால் படிக்க முடிஞ்சதாம்.

பத்தே நிமிடத்தில் குர் ஆனை மனப்பாடம் செஞ்சிருக்கார்னா பாத்துக்கங்களேன்.

இவரால 12 ஆயிரம் புத்தகங்கள்ல இருக்கற தகவல்களை அப்படியே கம்ப்யூட்டரை போல தர முடிஞ்சதாம்.

ப்ச்... இப்ப இவர் உயிரோட இல்லை. 2009-லயே இறந்துட்டாரு!
டிஸ்கவரில இவரப் பத்தி பல நிகழ்ச்சிகள் வந்துருக்கு. Rain Man அப்டின்ற ஒரு ஹாலிவுட் படமும் இவர வச்சு தான் எடுத்துருக்காங்க.  இவரது இந்த திறமைக்கு அவரோட மூளையோட குறைபாடு தான் காரணமாம்.

நம்ம மூளையும் தான் குறையோட இருக்குது! :)

Wednesday 7 August 2013

ஒரு உதவி செய்றீங்களா?



நேற்று சாயங்காலம் பரபரப்பான வேலைகளுக்கிடையே (ஹி ஹி! இங்க தான்!) வந்த ஒரு குறுஞ்செய்தி கவனத்தை ஈர்த்தது. நான் ரத்ததானம் செய்பவன் என்ற முறையில் சில வெப்சைட்களில் பதிவு செய்திருக்கிறேன். அப்படி ஒரு வெப்சைட்டிலிருந்து வந்த செய்தி தான் அது.

ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுவதாகவும் அப்போலோ கேன்சர் மருத்துவமனையில் வந்து ரத்தம் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அலுவலகப் பணிகளுக்கு பிறகு நேராக அப்போலோ கேன்சர் மருத்துவமனையை அடைந்தேன். மெசேஜை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டேன். 

ரிசப்சன்/என்கொயரி எங்கே என கண்கள் தேடின. அப்படி ஒன்றுமே அங்கில்லை. ரெஜிஸ்ட்ரேசன் என ஒரு கவுண்டரும், அட்மிசன் என ஒரு கவுண்டரும் மட்டுமே அங்கிருந்தது. 

நடமாடிய மனிதர்களில் ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்களே நிறைய பேர். கேன்சர் எனும் உயிர்க்கொல்லி நோய்க்கு சிகிச்சை தேடி கண்டம் விட்டு கண்டம் வந்துள்ளனர்.

ரெஜிஸ்ட்ரேசன் கவுண்டரை அனுகி விபரத்தைச் சொன்னேன். அவர் லேப் பக்கத்தில் உள்ள வேறு பில்டிங்கில் இருப்பதாகவும் அங்கு சென்று தானம் செய்யச் சொல்லி விட்டு அவரது வேலையைத் தொடர்ந்தார். (சும்மா தான் உட்காந்திருந்தார்!)

எனக்கு வந்த குறுஞ்செய்தியில் தானம் வேண்டிய நபரில் மொபைல் எண்ணும் இருந்தது. அதனால் லேப் செல்லுவதற்கு முன் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாம் என கால் செய்தேன். கிடைக்கவில்லை. மொபைல் எண்ணுடன் 0 சேர்த்து டயல் செய்தேன். கிடைத்தது. 

(உரையாடல் ஆங்கிலத்தில்)

“வணக்கங்க, என் பேரு ***, ப்ளட் வேணும்னு கேட்டு உங்களோட மெசேஜ் எனக்கு வந்தது. அதான் வந்திருக்கேன். நான் இப்ப “A” ப்ளாக் கீழே நின்னுகிட்டிருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?”

“சார், ரொம்ப நன்றி சார். நீங்க முடிஞ்சா மூணாவது மாடி போங்க சார். அங்க தான் பேசண்ட் இருக்காரு. நான் இப்போ நெல்லூர்ல இருக்கேன்” (ஆந்திரா) என்றார்.

மிகவும் படபடப்பாக இருந்தார்.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லீங்க, நான் மொதல்ல லேப்ல போய் ப்ளட் குடுத்துட்டு போய் பாக்குறேன். நீங்க கவலைப் படாதீங்க” என்று விட்டு நான்காவது மாடியிலிருந்த லேபை அணுகினேன்.

அங்கிருந்த லேடி சுவாரஸ்யமாக அவரது கம்ப்யூட்டரை ஆராய்ந்து கொண்டே வேறொரு அலுவலக நபரோ பேசிக் கொண்டிருந்தார்.

“மேடம், நான் ப்ளட் டொனேட் பண்ண வந்தி….”

“இப்ப பண்ண முடியாது சார். எல்லாம் நாளைக்கி தான்.”

“ஏங்க?”

“இப்ப டைம் முடிஞ்சி போச்சி. நீங்க போய்ட்டு நாளைக்கி காலைல வாங்க!”

“என்னங்க இது, ஒரு பேசண்ட் உயிருக்கு போராடிக்கிட்டிருக்காரு, அவருக்கு ப்ளட் வேணும்னு மெசேஜ் கெடச்சு நான் வேலை மெனக்கெட்டு வந்திருக்கேன். நீங்க கூலா….”

நிமிர்ந்து என்னை அப்போது தான் பார்த்தார்.

“சார், அஞ்சரை மணி வரைக்கும் தான் ப்ளட் டொனேட் பண்ண முடியும். நீங்க போய்ட்டு நாளைக்கு காலைல வாங்க”

அதற்கு மேல் அவரிடம் பேசி புண்ணியமில்லை என்று தெளிவாக புரிந்தது.

மீண்டும் கீழே வந்து ரெஜிஸ்ட்ரேசன் கவுண்டரிலிருந்த நபரை அனுகினேன்.

”என்ன சார் இது? ஒரு ப்ளட் டொனேட் பண்றதுக்கு இவ்ளோ சிக்கலா? இதுக்கெல்லாமா டைம் வச்சி வாங்குவிங்க?”

“என்ன சார் ஆச்சு”

“டைம் முடிஞ்சி போச்சுன்றாங்க. நாளைக்கி தான் எடுத்துப்பாங்களாம்” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் போது எனக்கு அழைப்பு வந்தது.

அழைத்தவர் நெல்லூர்க்காரர்.

“இதோ பாருங்க பேசண்ட் சைட்லேருந்து வேற கூப்புடறாங்க”

அவர் “இருங்க சார். நான் கேக்குறேன்” என்றார். போன் செய்தார். பேசினார். வைத்தார். என்னை செய்வதறியாது பார்த்தார்.

நான் போனை அட்டெண்ட் செய்தேன். “ஹலோ சார். ஐயாம் சாரி. நான் உங்களுக்கு இப்போ ஹெல்ப் பண்ணமுடியாத நிலைல இருக்கேன். இங்க ப்ளட் டொனேசன்லாம் இப்ப வாங்க மாட்டாங்களாம். நாளைக்கு தான் வரணுமாம்.”

”...............”
”இல்லீங்க இப்ப எடுத்துக்க மாட்டாங்களாம். நான் இதுக்காக நாளைக்கு வரமுடியாதுன்னு சொன்னேன். ஆனாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்றாங்க, அதனால நான் இப்ப கெளம்புறேன்”

எதிர்முனையில் நிலைமையை புரிந்து கொண்ட அமைதி நிலவியது.

சிறிது நேரம் கழித்து அவர் நடுங்கும் குரலில் கேட்டார், “சார், நீங்க பேசண்ட ஒரு தடவ பாத்து ‘உங்களுக்கு ஒண்ணும் இல்லை, நல்லாயிருவீங்க, நாங்கள்லாம் இருக்கோம்’னு சொல்றீங்களா?”
****

Saturday 18 May 2013

என்னுடைய சில கீச்சுகளின் தொகுப்பு!

என் சில கீச்சுகளின் தொகுப்பு!

சில விஷயங்கள் நம் கற்பனைகளை விட மிக சாதாரணமாக இருந்து தொலைந்து விடுகின்றன!

குழந்தைகள் உலகில் நுழைவதென்பது ஒரு கலை! எல்லோருக்கும் அது கை வராது!

வயசான பிறகு தான் நமக்கு வயசானதே உறைக்குது அதுக்குள்ள வயசாயிடுது!

தோல்வின்றது வாழ்க்கை நமக்கு தர்ற பாடங்கள்! என்ன, பல பேருக்கு பாடம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்!

குழந்தைகளோடு விளையாடும் பெரியவர்களின் உடல்மொழியில் அவர்களது பால்யம் கலந்திருக்கிறது!

ஒவ்வொருவர் பற்றியும் சில பிம்பங்கள் நமக்கு இருக்கின்றன. நேரில் கண்டதும் அவை உடைந்து குமிழிகளாகி விடுகின்றன!

நான் சொல்லிய பொய்களை விட சொல்லாத உண்மைகளை அதிகம் கவலை தருகின்றன!

எனக்கு உண்மையும் சொல்லத் தெரியுமென்பது பொய்க்குத் தெரியக்கூடும்!
நாம் உலகை நம் பார்வையில் பார்க்கிறோம்! உலகம் அதன் பார்வையில் நம்மைப் பார்க்கிறது... அற்பப் பார்வை!

குழந்தைகள் பெரியவராக நடிக்க விரும்புவதைப் போல பெரியவர்கள் குழந்தைகளாக நடிப்பதை விரும்புகிறார்கள்

டிவி எனும் அரக்கன் நம் குழந்தைகளின் மனதில் விதைக்கும் தாக்கம் மிக மிக மோசமானது! விளைவுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்!

முட்டாளாக இருப்பதன் பெருமை முட்டாளுக்கு மட்டுமே தெரியும்!

வாழ்க்கை எப்போதும் தேடலில் தான் கழிகிறது! தேடுவது கிடைத்து விட்டாலும் கூட!

வெளியே பெய்யும் மழையை விட மனதின் உள்ளே மழையாக பெய்யும் நீ தான் அதிகம் குளிர்விக்கிறாய்! உன்னிடமே கதகதப்பை தேடி நான்!

வெளியே பெய்யும் மழையை விட மனதின் உள்ளே மழையாக பெய்யும் நீ தான் அதிகம் குளிர்விக்கிறாய்! உன்னிடமே கதகதப்பை தேடி நான்!

எப்போதுமே மழை மண்வாசனையை மட்டுமல்ல, நிறைய ஞாபகங்களை கிளறி விடுகிறது!

குழந்தைகள் அவர்கள் பெற்றோரிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கின்றனர் # எப்படி பொய் சொல்வது என்பதை!

மழையை ரசித்துக் கொண்டிருக்கிறாய். உன்னை ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்!

வாழ்க்கை நிறைய புரிதல்களை கொடுக்கிறது! அதனை புரிந்து கொள்ளும் விதத்தில் தான் தவறு செய்து விடுகிறோம்!

குற்றம் சாட்டப்பட்டவர் அமைதியாக இருந்தால் அடுத்த பிரச்சனைக்கும் அவர் தலையே உருளும்!

வீட்ல யாராவது அடியோ திட்டோ வாங்கிகிட்டிருக்கற நேரம் பாத்து உள்ள வர விருந்தாளிங்க மனநிலை சொல்ல முடியாதது!

இன்றைய உலகில் பெரியவர்கள் பெரியவர்களாகவும் சிறியவர்கள் சிறியவர்களாகவும் இல்லை!

அடுத்தவரின் மனதை படிக்கும் சக்தி கிடைத்து விட்டால் யாருமே நண்பர்கள் இல்லை!

தேவைகளைப் பொறுத்தே பொருளின் மதிப்பு. ஆனால் நேசிப்பதைப் பொறுத்தல்ல அன்பு!

அனைவரும் நாலாபக்கமும் நசுக்கப் பட்ட பின்னரே விஸ்வரூபம் எடுக்கின்றனர்!

நல்லவர்களை நம்பாத இந்த உலகம் தீயவர்கள் தாங்கள் திருந்தி விட்டதாக சொன்னதும் உடனே நம்பி விடுகிறது!

எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைத்து விட்டால் அதன் மதிப்பிழந்து விடும்!

எல்லோருக்கும் ஏற்ற வகையில் நடந்து கொள்வதில் உள்ள சங்கடம் என்னவென்றால் அப்படி நடந்து கொள்ள முடியாதது தான்!

என்னிடமிருந்த புன்னகைகளை தெருவில் வீசி விட்டு சென்றிருந்தேன். திரும்ப வருகையில் அனைவரும் எடுத்துக் கொடுத்தனர், வட்டியோடு!

உண்மையைக் கூட சிறிது பொய் கலந்து சொல்லும் போது தான் நம்பி விடுகிறார்கள்!

 
 

Thursday 17 January 2013

நினைவாற்றலை வளர்க்க டிப்ஸ்!

பின்வரும்  பயிற்சி மிகவும் எளிமையானது!

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். 30 நாட்கள் இதனை தொடர்ந்து பயிற்சி செய்வேன் என்ற உறுதிமொழி மட்டுமே!

உங்கள் நினைவாற்றல் பன்மடங்கு பெருக வாழ்த்துக்கள்!



ஒரு நாளை நான்காக பிரித்துக் கொள்ளுங்கள்! அதாவது காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு என்று!

காலை உணவு உட்கொண்ட பிறகு ஒரு 2 நிமிடம் அமைதியாக அமர்ந்து தூங்கி எழுந்ததில் இருந்து காலை உணவு உட்கொண்ட வரையில் நடந்த விஷயங்களை மனதில் அதே வரிசைக்கிரமத்தில் அசை போடுங்கள்!

நினைவிருக்கட்டும். அதே வரிசைக் கிரமம் என்பது முக்கியமானதாகும்.

அதாவது காலை எழுந்தவுடன் பல் துளக்கி, காலைக்கடன்களை முடித்து, குளித்து…. இப்படி!

இவற்றை எந்த வரிசைப்படி நீங்கள் எப்படி செய்தீர்களோ அதே வரிசையாக ஞாபகப் படுத்திக் கொள்ளவும்.

பின்னர் மதிய உணவு எடுத்துக் கொண்ட பின்னர், காலை உணவு உட்கொண்டதிலிருந்து மதிய உணவு எடுத்துக் கொண்ட காலத்தை மட்டும் அதே வரிசைப்படி நினைவு படுத்திப் பார்க்கவும்

இதே போல் மாலை சிற்றுண்டி முடித்த பின்னர் மதிய உணவு சாப்பிட்டதிலிருந்து மாலை சிற்றுண்டி உண்ட காலம் வரையும்…

பின்னர் இரவு உணவுக்கு பின் மாலை சிற்றுண்டியிலிருந்து இரவு உணவு உட்கொண்ட காலம் வரையும் அதே வரிசைப்படி நினைவு படுத்தி பார்க்கவும்.

ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்கள் செலவு செய்தால் போதும். இது போல ஒரு நாளில் நீங்கள் செலவு செய்யும் நேரம் இது வரை 8 நிமிடங்கள்.

கடைசியாக உறங்க செல்லும் முன்னர் இரண்டு நிமிடங்கள் காலை எழுந்த்திலிருந்து இரவு உறங்கும் வரை நடந்த விஷயங்களை மனதில் ஒரு முறை அசை போடவும். ஏற்கனவே நான்கு முறை நீங்கள் இதனைச் செய்ததால் இது எளிதாக இருக்கும்.

இது போல ஒரு முப்பது நாட்கள் நீங்கள் பயிற்சி செய்து வந்தால் உங்கள் நினைவாற்றல் பெருகுவதை கண்கூடாக நீங்கள் காணலாம்!

இது எப்படி வேலை செய்கிறது என்றால், நமது மூளை ஒரு கத்தி போன்றது. கத்திய வச்சு நாம என்ன பண்றோம்?

காய், பழம் நறுக்கறோம். இப்டி பண்ணிகிட்டே இருந்தா அது காலப் போக்குல மொக்கையாகிடுது.

அப்ப அத நாம என்ன பண்றோம்? சாணை பிடிக்கிறோம். அது போலத்தான் நமது மூளையும்.

மனித மூளைக்கு எதாவது வேலை இருந்துகிட்டே இருக்கனும். இல்லன்னா அதுவும் மொக்கையாகிடும்.

நம்ம மூளையை சானை பிடிக்கற வேல தான் இது. இந்த டெக்னிக்க ஒரு முப்பது நாள் நீங்க பயிற்சி செஞ்சிங்கன்னா அது அருமையா வேலை செய்ய ஆரம்பிச்சிரும். எடுத்த எடுப்புலயே நைட்டு மட்டும் ஞாபக படுத்துனா என்னன்னு கேக்கக் கூடாது.

மூளைக்கு நாம பயிற்சி குடுக்க ஒரு நாளை நாலா பிரிச்சி இந்த மாதிரி செஞ்சிங்கன்னா அது உங்களுக்கு அடிமை!
உங்களோட நினைவாற்றல வளர்க்க ஒரு நாள்ல இருபத்து நாலு மணி நேரத்துல நீங்க செலவிடற நேரம் வெறும் பத்து நிமிசம் தான்.
அத நீங்க ஒதுக்க முடியாதா? அந்த பத்து நிமிசத்தையும் நாலா பிரிச்சி தான் ஒதுக்கறீங்க!
இந்த பயிற்சியின் பலனை நீங்க உணரனும்னா 30 நாள் விடாம பயிற்சி செய்யனும். பிரேக் விடாம.
 
பயிற்சி சிறக்க வாழ்த்துக்கள்!