Monday 13 August 2012

ஜப்பான் காரன் என்ன சொல்றான்னா!


ஒரு முறை தாஜ் குழுமத்தின் ஹோட்டல் ஒன்றில் ஜப்பானை சேர்ந்த திரு. மசாய் இமாய் என்பவரை ஒரு பயிலரங்கம் நடத்துமாறு அழைத்திருந்தனர்.

அனைவரும் "நல்லா தான போய்கிட்டு இருக்கு! இப்ப எதுக்கு இந்த ஆளெல்லாம்? அப்படி என்னத்த வந்து கிழிக்க போறாரு? அதுவும் அந்த ஆளுக்கு ஹோட்டல் பத்தி என்ன தெரியும்?" என்று பேசிக்கொண்டனர்.

அந்த நாளும் வந்தது. சரியாக ஒன்பது மணிக்கு திரு. மசாய் அனைவரிடமும் அறிமுகப்படுத்தப்பட்டார். அனைவரும் எதிர்பார்த்தது போல அழகான தோற்றமில்லாமலும் ஆங்கிலம் சரளமாக பேச தெரியாதவராகவும் இருந்தார் அவர்!

"அனைவருக்கும் காலை வணக்கங்கள்! வாருங்கள். நமது பயிலரங்கத்தை நாம் வேலை செய்யும் இடந்திலிருந்தே தொடங்கலாம்”, என்றவாறு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் அந்த இடத்தை விட்டு வெளியேறத் துவங்கினார். அருகில் இருந்த சலவை செய்யும் அறைக்குள் நுழைந்தார்.

அனைவரும் ஒன்றும் புரியாமல் அவரை பின் தொடர்ந்தனர். திரு. மாசை அந்த அறையிலிருந்த ஜன்னலின் வழியே வெளியே பார்த்தபடி,  "என்ன அழகான காட்சி!" என்றார்.

அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். சலவை செய்யும் அறையின் ஜன்னலின் வழியே அந்த நகரத்தின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்க்க முடியும்.

இதை சொல்லவா ஜப்பான்-லேர்ந்து வந்துருக்காரு?" என்று அனைவரும் முனுமுணுக்கத்தொடங்கினர்.

"இவ்வளவு அழகான காட்சி தெரியும் இந்த அறையை சலவை செய்யும் அறையாக உபயோகித்து வீணாக்கியிருக்கிறீர்கள். சலவை செய்யும் அறையை கீழ்தளத்திற்கு மாற்றி விட்டு இந்த அறையை விருந்தினர் அறையாக மாற்றுங்கள்" என்றார் அவர்.

ஆஹா! இந்த யோசனை இது வரை நம் யாருக்கும் தோன்ற வில்லையே என்று நினைத்தவாறே தலைமை அதிகாரி சொன்னார், "சரி சார்! இதை செய்து விடுகிறோம்"

"வாங்க செய்யலாம்"

"ஓகே சார். இதனை குறிப்பு எடுத்துக்கொண்டு ஒரு அறிக்கை தயார் செய்து விடுகிறோம். அதன் பின்னர் இதை செய்து விடுகிறோம்"

"மன்னிக்கவும். இதில் குறிப்பு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. இப்போதே செய்து விடுங்கள். உடனடியாக!"

"உடனடியாகவா?"

"ஆமாம்! கீழ்தளத்தில் ஒரு அறையை சலவை செய்யும் இடமாக முடிவு செய்யுங்கள். இங்கிருக்கும் பொருட்களை அங்கு கொண்டு செல்லுங்கள். இதற்கு சில மணி நேரம் பிடிக்கும் அல்லவா?"

"ஆமாம்"

"சரி! நாம் அனைவரும் மதிய உணவுக்கு முன் இங்கு வருவோம். அதற்குள் அனைத்து பொருட்களும் இட மாற்றம் செய்யப்பட்டு இந்த அறை கார்பெட், சோபா, பெட் மற்றும் மர சாமான்கள் அனைத்தும் போடப்பட்டு இன்றிலிருந்தே நீங்கள் சில ஆயிரங்களை சம்பாதிக்க துவங்கலாம்"

வேறு வழியில்லாமல், "ஓகே சார்!" என்றார் முதன்மை அதிகாரி.

அவர்கள் அடுத்து உணவகத்தை சென்றடைந்தனர். அங்கு திரு. மாசை அவர்கள் இரண்டு பெரிய தொட்டி முழுவதும் கழுவப்பட வேண்டிய தட்டுகள் இருப்பதை கண்டார்.

அவரது கோட்டை கழற்றி விட்டு அந்த தட்டுகளை சர்வ சாதாரணமாக கழுவ ஆரம்பித்தார்.

"சார், என்ன செய்கிறீர்கள்?" அங்கிருந்த அதிகாரிகளுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.

"ஏன்? நான் தட்டுகளை கழுவுகின்றேன்" என்றார் திரு. மாசை.

"ஆனால் சார், அதை செய்வதற்கு இங்கு ஆட்கள் இருக்கின்றனர்"

"இந்த தொட்டி தட்டுகளை கழுவுவதற்கும் இந்த அடுக்கு கழுவிய தட்டுகளை அடுக்குவதற்கும் தானே உள்ளது?"

அனைவரும் வாயடைத்து போயினர். இந்த ஆளு இதுக்கு தானா பிளைட் புடிச்சு வந்தாரு?.....

வேலையை முடித்தவுடன் கேட்டார், "இங்கு எத்தனை தட்டுகள் உள்ளன?"

"நிறைய! அதனால் எங்களுக்கு தட்டுப்பாடே வருவதில்லை!" என்றார் மேனேஜர் பெருமிதமாக!

"ஜப்பான் மொழியில் 'முடா' என்ற வார்த்தை உள்ளது. அதன் பொருள் கழிவு. முடா என்றால் தேவை இல்லாமல் செலவழித்தல். நீங்கள் அறிய வேண்டிய கருத்து இவை இரண்டையும் தவிர்த்தல். தேவைக்கு அதிகமான தட்டுகள் இருந்தால் அவற்றை பராமரிப்பதில் அதிக நேரம் விரயமாகும். நம்முடைய முதல் படி அதிகப்படியான தட்டுகளை நீக்கி இந்த நிலைமையை மாற்றி அமைத்தல் ஆகும்!"

"சரி சார்! எங்களது ரிப்போர்ட்-டில் இதனை கண்டிப்பாக குறித்து விடுகிறோம்"

"இல்லை, ரிப்போர்ட் எழுதுவதற்காக நம் நேரத்தை வீணாக்குவதும் முடா ஆகும். உடனே தேவைக்கு அதிகமான தட்டுகளை பேக் செய்து அவை தேவைப்படும் தாஜ் குழுமத்தின் வேறு ஹோட்டலுக்கு அனுப்பி விடவும். இந்த பயிலரங்கம் முழுவதும் இப்படியாக ஒளிந்திருக்கும் முடா-வை நீக்கி விட வேண்டும்

இப்படியாக ஒவ்வொரு இடத்திலும் முடா-வை நீக்குதல் குறித்து அனைவரும் கற்றுனர்ந்தனர்.

கடைசியாக திரு. மாசை அவர்கள் ஒரு கதையை சொல்லி முடித்தார்.

வேட்டையாடுவதில் விருப்பமுள்ள ஒரு அமெரிக்கனும் ஜப்பானை சேர்ந்த ஒருவனும் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்தனர். ஆர்வ மிகுதியில் காட்டின் உள் பகுதியில் சென்று விட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியில் ரவையும் தீர்ந்து விட்டதை அறிந்தனர். அப்போது ஒரு சிங்கத்தின் உறுமல் அங்கு கேட்டது. அமெரிக்கன் உடனே உடனே ஓடத்துவங்கினான். ஆனால் ஜப்பான் நாட்டுக்காரன் சிறிது இடைவெளி எடுத்து அவனது வேகமாக ஓட உதவும் காலணியை அணியத் துவங்கினான்.

அமெரிக்கன் கேட்டான், "ஏய், என்ன செய்கிறாய்? நாம் உடனடியாக நமது காரை அடைந்தாக வேண்டும்?"

"இல்லை, நான் உன்னை விட சற்று முன்னே இருப்பதை உறுதி செய்து கொண்டால் போதும்!" என்றான் ஜப்பான் காரன்!

அனைவரும் அப்போது தான் உணர்ந்தனர், தன் இரையை அடைந்த உடன் சிங்கம் மற்றவரை தாக்காது என்று!

திரு மாசை அவர்கள் மேலும் சொன்னார், "இந்த போட்டி நிறைந்த கடுமையான உலகில் நாம் மற்றவரை விட சில அடிகள் முன்னே இருப்பது முக்கியமானது. என்ன வளம் இல்லை இந்த பாரத நாட்டில்? உங்கள் உற்பத்தி செலவை குறைத்து சிறந்த பொருட்களை உற்பத்தி செய்வதை கருத்தில் கொண்டால் மற்ற எல்லா நாடுகளை விட நீங்கள் மிகச் சிறந்து விளங்கலாம்"

No comments:

Post a Comment