Friday 5 August 2016

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 )


ந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்...
கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்பதே பதில்.
பல்வேறு கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நாம், நமது பூமியிலிருக்கும் ஆழ்கடலை இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை. ஏனெனில், விண்வெளிப் பயணத்தை விட மிகவும் கடினமானது ஆழ்கடல் பயணம்தான்.
இதற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, அந்த எடை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நம்மை அழுத்தும். பத்து மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் இரண்டு மடங்காகி இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழத்திற்கும் கடலின் அழுத்தமும் இரு மடங்காக, அதிகரித்துக்கொண்டே செல்லும். தவிர, இன்னுமொரு பிரச்னை உண்டு. சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரையே ஊடுருவும் என்றாலும், ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் தெரியும். அதன் பின்னர் கும்மிருட்டுதான்.  

  
நம்மால் சுவாசக் கருவி அணிந்து கொண்டு ஆயிரம் அடி வரை கூட இறங்க முடியும்.  ஆனால் நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்ற சில உடல் உபாதைகள் வரும் அபாயம் உண்டு. நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே பயணிக்காது. ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கியும் வெடித்துச் சிதறி விட வாய்ப்பிருக்கிறது. இதனாலேயே ஆழ்கடல் குறித்த கேள்விகளுக்கு, வெகுநாட்களுக்கு விடை கிடைக்கவில்லை.

மரியானா அகழி
இந்த உலகிலேயே மிக ஆழமானப் பகுதி, மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது, மரியானா அகழி. வளர்பிறை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளதால், 'மரியானா நீள்வரிப்பள்ளம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்த அகழியானது, பசிபிக் நிலத்தகடும், மரியானா நிலத்தகடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் 35,840 அடி  ஆகும். சேலஞ்சர் ஆழப்படுகுழி 36200 அடி  (அதாவது 11034 மீட்டர்) ஆழமுடையது.
உங்கள் ஒற்றை விரல் நகத்தின் மீது ஆயிரம் கிலோ எடையை வைத்தால் எப்படி இருக்கும்? (படிக்கும் போதே வலிக்கிறது அல்லவா?) இப்பகுதியின் நீரினால் ஏற்படும் அழுத்தம் அந்த அளவுக்கு இருக்கும். (அதாவது 1086 பார்கள் அழுத்தம்) சேலஞ்சர் மடுவில் உள்ள நீரின் வெப்பநிலை, அதிகபட்சம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை இதனுள்ளே வைத்தால், அதற்கு பிறகும் ஏழாயிரம் அடி மிச்சமிருக்கும் என்றால், இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.

மவுன கிய எரிமலை
இந்த சமயத்தில் ஒரு பொது அறிவுத்தகவல்- உலகிலேயே மிக உயரமான இடம் எவரெஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உயர அளவீடுகள், கடல் மட்டத்திலிருந்து அளவிடப்படுகின்றன. ஹவாய் தீவிலிருக்கும் 'மவுன கிய' எனும் எரிமலை,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 13802 அடி உயரம் உடையது. இந்த எரிமலை கடலினுள் அமிழ்ந்துள்ளது. அங்கிருந்து கணக்கிட்டால், இதன் உயரமானது 33000 அடியாகும். எவரெஸ்ட்டின் உயரம் 29029 அடிதான். எனவே உண்மையில், உலகிலேயே உயரமான இடம் மவுன கிய எரிமலைதான். கடல் மட்டத்திலிருந்து மட்டுமே கணக்கீடுகள் எடுக்கப்படுவதால் மவுன கிய எரிமலை அந்தப் பெருமையை எவரெஸ்ட்டிடம் இழந்து விட்டது.
மவுன கிய எரிமலையில் ஏராளமான தொலைநோக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. நகரங்களின் வெளிச்சம், ஓசை போன்ற மாசுக்கள் இல்லாமல் இந்த எரிமலையின் உச்சியில் நிலவும் சுற்றுப்புறமானது, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
தற்போது இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒருங்கிணைந்து, சுமார் 140 கோடி அமெரிக்க டாலர் செலவில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இந்த எரிமலையில் நிறுவி வருகின்றன. இதுதான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒருவரின் சட்டையிலிருக்கும் பட்டனைக் கூட மிகத்துல்லியமாக ஆராய முடியும். இந்த மிகப்பிரம்மாண்ட தொலைநோக்கியின் கட்டுமானம் 2022-ம் ஆண்டுதான் முடியும்.
சிம்போரஸோ எரிமலை
சரி. நாம் மீண்டும் மரியானா அகழிக்கு வருவோம்.
சேலஞ்சர் மடுவின் தரைப்பகுதி, பூமியின் மிக ஆழத்தில் இருந்தாலும், அது பூமியின் மையத்திற்கு அருகில் இல்லை. ஏனென்றால், நமது பூமியின் ஒழுங்கற்ற வடிவமே இதற்கு காரணம். பூமி ஒரு முழுமையான வட்டமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (பண்டை காலத்தில் உலகம் தட்டையானது என நினைத்துக் கொண்டிருந்தது தனிக்கதை!). ஆனால் பூமியானது ஒரு ஒழுங்கற்ற (சிறிது பேரிக்காய் போன்ற) வடிவத்தில் இருக்கிறது. தன்னைத்தானே சுற்றி வரும் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று உப்பிக் காணப்படுகிறது. பூமியின் துருவங்களின் விட்டமானது, பூமி மையத்திற்கு நெருக்கமாக உள்ளது.  இதனால் பூமியின் மையத்திற்கு மிக அருகில் உள்ளது, ஆர்க்டிக் கடலின் தரைப்பகுதியே ஆகும்.
இப்போது மீண்டுமொரு பொது அறிவுத்தகவல்- உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் தானே பூமியின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இடமாக இருக்கக் கூடும்? காதைத் தீட்டிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்கிறேன். ஈக்குவடாரில் உள்ள சிம்போரஸோ எனும் எரிமலைதான், பூமியின் மையத்திலிருந்து அதிதொலைவு (20548 அடிகள்) உள்ள இடம். காரணம் இப்போது புரிந்திருக்குமே? எவரெஸ்ட்டை (29029 அடிகள்) விட உயரம் குறைவாக இருந்தாலும், இந்த எரிமலையின் அமைவிடமான ஈக்குவடாரில் பூமி உப்பலாகக் காணப்படுவதால் இது சாத்தியமானது.

சரி! இந்த மரியானா பள்ளம் எப்படி ஏற்பட்டது? சுருக்கமாக IBM என்றழைக்கப்படுகின்ற 'ஐஸு-போனின்-மரியானா (Izu-Bonin-Mariana)'  நிலத்தகடுகளினால் உண்டானது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பசிபிக் நிலத்தகடும் சிறிய மரியானா நிலத்தகடும் ஒன்றையொன்று மோதிக் கொண்டபோது, பசிபிக் நிலத்தகடானது மரியானாவின் அடியில் சென்றது. இதனால் இந்த மாபெரும் அகழி உருவானது. இது சுமாராக 180 மில்லியன் வருடங்கள் பழமையானது.
மரியானா அகழியின் தரையை தொட்ட சாதனையாளர்கள்
இங்கிலாந்துக் கடற்படையைச் சேர்ந்த சேலஞ்சர் என்ற கப்பல்தான் முதன்முதலில், இந்த இடத்தின் ஆழத்தை 26850 அடி என்று கண்டறிந்து, உலகுக்கு அறிவித்தது. 1875 ம் ஆண்டு ஒலி அதிர்வு முறையில் இதைக் கணித்துச் சொன்னார்கள். இந்தக் கப்பலை பெருமைப்படுத்தும் விதமாகவே, இந்த ஆழ்குழிக்கு 'சேலஞ்சர் படுகுழி' எனப் பெயரிடப்பட்டது. 1995-ம் ஆண்டு, கைகோ என்ற ஆள் இல்லாத நீர்மூழ்கியும் அதன் பின்னர் 2009 ம் ஆண்டு நெரயஸ் என்ற மற்றுமொரு ஆள் இல்லாத நீர்மூழ்கியும் இந்த ஆழத்தை தொட்டுவிட்டு வெற்றியுடன் திரும்பின.
உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைக் கூட ஆயிரக்கணக்கானவர்கள் தொட்டு விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய நாள் வரை மரியானா அகழியின் தரை வரை சென்று திரும்பியவர்கள் மூன்றே பேர்தான். அதில் ஒருவர் உலகறிந்த, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரோன். மற்ற இருவர், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டான் வால்ஷ் மற்றும் ஜேக்குஸ் பிக்கார்டு ஆவர்.
'அதெப்படி? அதிக ஆழம் செல்லும்போது நீர்மூழ்கி கூட வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது என்றீர்களே... 'என்பவர்களுக்கு, அதிக ஆழத்தில் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது கைகொடுத்தவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு. இவர் மேலே சொல்லப்பட்ட இருவரில் ஒருவரான ஜேக்குஸ் பிக்கார்டின் தந்தையாவார்.
இவர் பலூனில் பறந்து பல சாதனைகளை படைத்தவர். அவ்வாறு பலூனில் பறப்பதற்காக வடிவமைத்திருந்த கருவியில், நீர்க்குமிழியின் தத்துவத்தைப் பயன்படுத்தி, சிறிய மாற்றங்களைச் செய்து கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார். எடை குறைவாகக் காணும் இயல்புடைய திரவத்தை, ஒரு தொட்டியில் கேப்ஸ்யூல் வடிவிலான ஒரு இரும்பு உருளையின் மேல் அடைத்து, ஆழ்கடலுக்குள் செல்ல ஏதுவாக இரும்பு பட்டைகளையும், மேலே எழும்பி வருவதற்காக மின் மோட்டாரையும் இணைத்தார். ஆளில்லாமல் அனுப்பி பல முறை சோதனை செய்து வெற்றி கண்டார்.
இந்தக்கருவி, அதற்கு பிறகு பலரால் இன்னும் மேம்படுத்தப்பட்டது. முதன்முறையாக ஒரு மனிதனை ஏற்றிக்கொண்டு 13701 அடி ஆழம் வரைச் சென்று, சோதனையில் வெற்றியும் காணப்பட்டது. ஆனால், அதிக ஆழம் செல்வதற்கு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 1960-ம் ஆண்டு, தங்களது எட்டாவது முயற்சியில், மரியானா படுகுழிக்கு உள்ளே புகுந்தனர் ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டின் மகனான ஜேக்குஸ் பிக்கார்டும், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் டான் வால்ஷ் என்பவரும்.
அவர்கள் சென்ற நீர்முழ்கியின் பெயர் ட்ரெயிஸ்ட். அதில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. வினாடிக்கு 0.914 நாட் என்ற வேகத்தில் அவர்கள் பயணித்தனர். வான்டன் எனும் அமெரிக்கப் போர்க்கப்பல், அவர்கள் பயணித்த பேத்திஸ்க்கோப் ட்ரெயிஸ்டியுடன் தொடர்பிலிருந்தது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவியின் மூலம் ஏழு வினாடிகள் கழித்துதான் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

32500 அடிகள் இறங்கியிருந்தபோது, வெளிப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அதே நேரம் அவர்கள் இருந்த அறை குலுங்கியது. "நாம் தரையைத் தொட்டு விட்டோமோ?" என்றார் வால்ஷ்.  
"இல்லையே, ஆழம் காட்டும் கருவியில் அவ்வாறு காட்டப்படவில்லையே" என்றார் பிக்கார்ட்.
அவர்களின் கலம் மெதுவாக கீழிறங்கிக் கொண்டிருந்தது. கீழே தரை தென்படவில்லை.
ஒருவேளை ஏதேனும் பெரிய கடல்மிருகத்தை மோதி விட்டோமோ? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களின் எதிரிலிருந்த கருவிகள் எல்லாம் எந்தவித தவறையும் காட்டவில்லை. உடனே பிராண வாயு உள் செலுத்தும் கருவி உள்பட, ஒலி எழுப்பக்கூடிய கருவிகள் அனைத்தையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். அந்த மயான அமைதியிலும், வெளிப்புறத்திலிருந்து எதுவோ உடைவது போன்ற ‘க்ரீச், க்ரீச்’ எனும் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து கீழே செல்வது, இல்லையெனில் திரும்ப சென்று விடுவது என்று இரண்டே வாய்ப்புகள் அவர்களிடத்திலிருந்தன. அவர்கள் தேர்ந்தெடுத்தது முதலாவது வாய்ப்பை. தொடர்ந்து பயணித்து அவர்கள் மரியானா அகழியின் ஆழத்தை (35,797 அடி) அடைந்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர பயணத்தில் ஆழத்தைத் தொட்டு விட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான சாதனை செய்யப்பட்டு விட்டது.  
ஆனால் அவர்கள் உணர்ந்த அந்த சத்தம் மட்டும் என்னவென்று தெரியவில்லை. வெளியே பார்க்க உதவும் துளை வழியே எட்டிப் பார்த்தார் வால்ஷ். அவர்களுக்கும் வெளிப்புற நீரின் அழுத்தத்திற்கும் இடையே இரு கண்ணாடிகள் மட்டுமே உண்டு.
"அந்த சத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா... கண்டுபிடித்து விட்டேன்." என்றார் புன்முறுவலுடன்.
வெளியே பார்க்க உதவும் கண்ணாடிகளில், வெளிப்புறக் கண்ணாடி விரிசல் விட்டிருந்திருக்கிறது. அந்த விரிசலின் ஒலியையே அவர்கள் கேட்டிருந்திருக்கிறார்கள். அந்த விரிசல் மட்டும் பெரிதாகி உடைந்து, உள்ளிருக்கும் கண்ணாடியும் உடைந்திருந்தால் இருவரும் உயிருடன் தப்பித்திருக்க முடியாது. சில சரித்திரச் சாதனைகள் படைக்கப்படும்போது, சோதனைகளும் தாமாக விலகி விடுகின்றன போலும்.

No comments:

Post a Comment